ஜனாதிபதி ரணில் பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாட்டினது நெருக்கடி நிலைமைகளின்போது கட்சிகளின் பங்களிப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்த பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.