தமிழர்களின் ஒற்றுமையை காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய வளங்களை நினைத்தவாறு வெளிநாடுகளுக்கு கொடுப்பதிலே எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அரசு தற்போதைய பொருளாதார நிலைமை கருதி தேசிய வளங்களை விற்பதும் அல்லது வேறு விதமாக வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதும் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய இரகசியமாக தாங்கள் நினைத்தவாறு ஜனாதிபதியோ அல்லது சம்பந்தப்பட்ட துறை சார் அமைச்சரோ அல்லது திணைக்களங்களின் தலைவர்களோ முடிவு எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் நிலைமை அருதி அதற்குரிய துறை சார்ந்தவர்களிடம் அனுமதியுடன் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பொதுநலன் கருதி செயல்பட வேண்டும்.

இந்த நாட்டிற்கும் 2009 க்கு பின்பு தமிழ் மக்கள் மேலும் மேலும் பலவீனமடைத்து ஒரு இக்ட்டான சூழ்நிலையில் நடுச்சந்தியில் திக்கு தெரியாமல் நிற்கும் ஒரு நிலையில், தற்போது இருக்கும் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளது கொள்கைகளும் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள்ளே பிளவு பட்டு இருப்பது அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் வடகிழக்கு சிவில் சமூக குழுவானது நேற்றைய சந்திப்பை ஒழுங்குப்படுத்தி ஒரே மேசையிலே தேசியக் கட்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளும் ஒரு சில கட்சிகளையும் அழைத்து ஒரு மேசையில் இருந்தது ஒரு மகிழ்வான தருணமாக இருந்தது. அந்த கூட்டு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இந்த கூட்டு ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களது அரசியல் விடுதலையை, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான கூட்டாக அமையுமாக இருந்தால் உண்மையிலேயே நாங்கள் அனைவரும் சந்தோஷப்படக்கூடிய நிகழ்வாக இருக்கும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதுவரை நேரடியாக தேர்வு செய்யப்படாதவர் அவருக்கு முன்பு 6 ஜனாதிபதிகளில் நாங்கள் விரும்பி இரண்டு ஜனாதிபதிகளை கொண்டு வந்திருந்தோம். ஆனால் நாங்கள் வாக்களித்து ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டவர்களும், நாங்கள் விரும்பாத நான்கு பேரும் இந்த நாட்டை ஆண்டு, எங்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. எங்களது இனப்பிரச்சினை தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை. அந்த வகையில் இன்னும் இன்னும் நாங்கள் இந்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை நாங்கள் காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. ஒற்றுமையை காட்டுவது என்பது அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டிய ஒரு நிலையாகவும் இருக்கலாம். ஏனென்றால் கட்சிகளும் வடகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் நலன் விரும்பிகள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கு மேலே வாக்கெடுத்து வெல்லக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகாது என்கின்ற நேரத்திலே சில வேளைகளில் எங்களுடன் பேசலாம்.

தற்போது ஜனாதிபதியாக வருவதற்கு ஆசைப்பட்டு மூன்று வேட்பாளர்களும் வாக்குகளை எந்த வழியில் பெறலாம் என்று நினைக்கின்றார்கள் தவிர தமிழ் மக்களது புரையோடிப் போய் உள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை. ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையை காட்டி பிரச்சாரம் செய்கின்றார்களே தவிர இந்த பொருளாதாரச் சூழ்நிலை எப்படி ஏற்பட்டதன் என்ற அடிப்படைத் தன்மையை புரிந்து கொள்வதாக தெரியவில்லை. இந்த நாட்டிலே ஆயுதப் போராட்டம் தொடங்கியதில் இருந்து தான் இந்த நாட்டின் கையிருப்பு இல்லாமல் போனது என்பதை உணராதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றார்கள். ஆட்சிக்கு வந்தால் மூன்று வேலை சாப்பாடு தருவேன் என்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க போலீஸ் அதிகாரங்கள் அற்ற 13 வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறுகின்றார். சஜித் பிரேமதாசாவும் ஒரு வெளிப்படுத்தல் தன்மையுடன் பகிரங்கமாக பேசுவதாக இல்லை.

ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி எங்களது ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய தேவை தற்போதைய நிலைமையில் தேவைப்பாடாக இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் வந்திருந்தன.

இலங்கை தமிழரசு கட்சி தங்களுக்குள் ஒரு முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டிருக்கின்றார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் கூடுதலான பெரும்பாலான தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பொது வேட்பாளர் கருத்தை ஆதரித்திருந்தனர். அந்த வகையில் அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். இந்த வகையில் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்