ராஜபக்சர்களை நம்பி பொதுஜன பெரமுன உருவாக்கப்படவில்லை

ராஜபக்சர்களை மட்டுமே இலக்காக கொண்டு பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சித் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொhபாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையான சில வரலாறு தெரியாத இளம் தலைமுறையினரே ராஜபக்ஷர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர்.

பொருளாதார அரசியல் ரீதியில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட போது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எனவே இந்த நிலையில் ஜனாதிபதியின் காலை வாரி விடுவது முறையற்றது. பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக கூறப்படுவது அடிப்படையற்றதாகும்.

அவரது அரசியல் அனுபவம், சர்வதேச உறவுகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பாரிய மாற்றம் ஏற்படும்.

ஒருசில சிரேஷ்ட அரசியல்வாதிகள் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டின் நிலையையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பொருளாதார மீட்சிக்காக சிறந்த திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

எனவே நாட்டினது நலனை முன்னிறுத்திச் செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.