வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் சின்னங்கள் பிரிவினைவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அழிக்கப்படுகின்றன – உதய கம்மன்பில

முல்லைத்தீவு குருந்தூர்மலை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பிரிவினைவாதிகளிடமிருந்தோ அல்லது தீவிரவாதிகளிடமிருந்தோ அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்துதான் காப்பாற்ற வேண்டியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (15) தெரிவித்தார்.

இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதாகத் தெரிவித்த கம்மன்பில, அமைச்சர் சிறில் மத்யூ யுனெஸ்கோ அமைப்பிற்கு அனுப்பியுள்ள முறையீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 276 இடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை 1983 ஆம் ஆண்டளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள் பிரிவினைவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அழிக்கப்படுவது மட்டுமன்றி, அரசாங்க அதிகாரிகளும் செயலற்றவர்களாகவும், நீதிமன்றங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கி ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணையை எதிர்வரும் 19ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிப்பதாக எதிர்பார்ப்பதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.