வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது – எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் துரோகத்துக்கு விலை போனதால் ஆட்சி வீழ்த்தப்பட்டிருக்கிறது. அங்கஜன்,  சுமந்திரனின் ஆசீர்வாதத்தோடு வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறதென தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தேர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நடைபெற்ற வல்வெட்டித்துறை நகரசபைக்கான தலைவர் தேர்தலில் தமிழ்த் தேசியத்தை சீர்குலைக்க கூடிய விடயங்கள் நடைபெற்று சுயேட்சை குழுவின் தலைவரான செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 7 உறுப்பினர்களும் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சை குழுவில் 4 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பியில் 3 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் 2 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவரும் என மொத்தமாக 17 பேர் காணப்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் வல்வெட்டித்துறை நகரசபையின் உப தலைவராக தெரியப்பட்டு வந்த ஞானேந்திரன் தனக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனக் கோரி வெளியேறியிருந்தார். சாதி மத பிரதேசத்தைக் கடந்து தமிழ்தேசியம் நிற்கின்றது என்பதை காட்டுவதற்காக இதுவரை காலமும் ரெலோ இயக்கத்துடன் பிரிந்துநின்ற சதீஷை இணைத்து முதல் சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கினோம்.

தங்கதுரை, குட்டிமணி,  தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணிலே தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் இதற்கு பக்கபலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவளித்தது. ஆனால் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செல்வேந்திராவின் 4 உறுப்பினர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப்இன் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,  ஈ.பி.டி.பி என்பன இணைந்து வல்வெட்டித்துறை நகரசபையை கைப்பற்றியுள்ளது.

வல்வெட்டித்துறையில் தற்காலிகமாக தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது துரோகத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதுபோன்ற எத்தனையோ துரோகங்களை தமிழ் தேசியம் கண்டிருக்கிறது. துரோகங்கள் புதிதல்ல.

துரோகங்களுக்கு தற்காலிக வெற்றி கிடைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் துரோகத்துக்கு விலை போனதால் ஆட்சி வீழ்த்தப்பட்டிருக்கிறது. அங்கஜன்இ சுமந்திரனின் ஆசீர்வாதத்தோடு வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது. நாங்கள் இருக்கின்றோம் நாங்கள் விழுந்து கிடக்கப்போவதில்லை என உறுதி கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.