யாழ் மாநகரசபைக்கென இதுவரையில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பிரதித் தலைவரும் யாழ் மாவட்ட துணை முதல்வருமான துரைராசா ஈசன் தொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையில் பிரதி முதல்வருக்கு அதிகாரங்களை தற்போதை முதல்வர் மணிவண்ணன் தரவில்லை. வடகிழக்கிலுள்ள ஏனைய சபைகளில் முதல்வர்கள் அதிகாரங்களை பகிர்ந்து பிரதி முதல்வருக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளார்கள். ஆனால் யாழ் மாநகரசபையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
யாழ் மாநகரசபையில் உள்ள நான்கு குழுக்களில் ஒரு குழுவில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. 22 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்தமானது. 50% வீதத்திற்கு மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை அங்கத்துவர்களாகக் கூட இணைத்து கொள்ளவில்லை. முதல்வர் திட்டமிட்ட வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (ஈ.பி.டி.பி) இணைந்து கூட்டமைப்பை புறக்கணித்து வருகிறார்.
ஒரு வட்டாரத்துக்கு 5 மில்லியன் என 135 மில்லியன் ரூபா யாழ் மாநகரசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சதத்தை கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் கூட எம்முடன் இது வரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆனால் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) மூன்று உறுப்பினர்களை சந்தித்து முதல்வர் மணிவண்ணன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்தார்.