மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத வீட்டுத்திட்டங்கள் அமைச்சர்களால் திறந்து வைப்பு

கடந்த (6) திகதி ஞாயிற்றுகிழமை குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸின் (zakath house) நிதியுதவியுடன் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் எருக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனின் (zakath foundation ) பூரண ஒத்துழைப்புடனும் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்திற்கு அமைய முதற்கட்டமாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள 75 வீடுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளர்களுக்கு கையளித்தனர்.

எனினும், இந்த வீட்டுத்திட்டத்திற்கு உரிய அனுமதிகளோ, பிரதேச சபையின் நிர்மாண நடைமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்று மன்னார் பிரதேசசபை தெரிவித்துள்ளது.

பல இலட்சம் ரூபா வருமான இழப்பு

அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் யுத்ததினால் இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களின் நலன்கருதி மத்தியகிழக்கு நாடுகளின் நிதியுதவியில் அமைக்கப்படும் வீட்டுதிட்டங்களுக்கு உரியவாறு பிரதேச சபையிடமோ சம்மந்தப்பட்ட திணைக்களங்களிடமோ அனுமதி பெறப்படுவதில்லை எனவும் மன்னார் பிரதேச சபையின் கணக்காய்வு ஆவணங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்சியாக அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் இவ்வீட்டு திட்டங்களால் மன்னார் பிரதேச சபைக்கு பல இலட்சம் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளமை மன்னார் பிரதேச சபையின் வருமானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு தேடலில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உள்நாட்டு யுத்ததின் காரணமாக 1990 ஆண்டு முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தநிலையில் 2009ஆண்டு யுத்தம் நிறைவுற்ற பின்னர் அவர்கள் தங்கள் சொந்த இடங்களில் படிப்படியாக மீளக்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்குமாக மத்திய கிழக்கு நாடுகளான குவைத்,கட்டார்,ஓமான்,டுபாய் போன்ற நாடுகள் பல கோடி ரூபா நிதி உதவிகளைச் செய்துவருகின்றன

ஆனாலும் அந்த நிதிகள் சில திட்டமிடப்படாத செயற்பாடுகளினால் பயன்பாடு இன்றியும் அதே நேரம் அதன்மூலம் வருமானத்தை பெற்று கொள்ள வேண்டிய உள்ளூராட்சி மன்றங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில், குறித்த 200 வீட்டு திட்டத்திற்கென மன்னார் பிரதேச சபையிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்பதுடன் பிரதேச சபையின் வீட்டுத்திட்டங்களுக்கான நிர்மாண நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள்

இவ்வாறு மன்னார் பிரதேச சபையிடம் உரியவாறு அனுமதி பெறபடாமையினால் மன்னார் பிரதேச சபைக்கு “குவைத் விலேஜ்” வீட்டுத்திட்டத்தினால் கிடைக்க வேண்டிய ஏழுலட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

2019 ஆண்டு மன்னார் பிரதேச சபையின் மாகாண கணக்காய்வு அறிக்கையின் படி மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள், கடைகள், வீடுகளின் நிர்மாணங்கள் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச சபை இவ்வாறான சட்ட விரோத கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை சுட்டி காட்டியிருந்தது

மேலும் கட்டடங்கள் அமைக்கும் போது அனுமதி பெறுதல் கட்டாயம் எனவும் உபபிரிவிடுகை, நில அளவை வரைபடம் என்பன கட்டாயம் எனவும் 2021 ஆம் ஆண்டு முன்னைய அனுமதி பெறாத திட்டங்கள் தொடர்பாக மன்னார் பிரதேச சபைக்கு உள்ளூராட்சி திணைக்களம் கடிதம் மூலம் அறிவித்திருந்த போதும் முன்னதாக அமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதிலும் புதிதாக கட்டடங்களை அமைக்கும் போது அனுமதி வழங்குவதிலும் உள்ளூராட்சி திணைக்களத்தின் எழுத்து மூல அறிவித்தலை மன்னார் பிரதேச சபை நடைமுறைப்படுத்தாத நிலையே காணப்படுவதாக கூறப்படுகின்றது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மன்னார் பிரதேச சபையிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சபையின் அனுமதி பெறாமல் கடந்தகாலங்களில் முடிவுறுத்தப்பட்ட 716 வீடுகள் உள்ளடங்கிய வீட்டத்திட்டங்கள் தொடர்பில் சபைக்கு கிடைக்க வேண்டிய அனுமதிகட்டண வருமானம் தொன்னூற்று ஐந்து லட்சத்து இருபத்தென்னாயிரத்து ஐனூற்று பதினொரு ரூபா பணம் கிடைக்கப்பெறாததினால் மன்னார் பிரதேச சபைக்கு வருமானமிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபை தகவல் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தற்போது திறக்கப்பட்டுள்ள “குவைத் விலேஜ்” வீட்டத்திட்டமும் அனுமதி பெறப்படாமையினால் ஒட்டு மொத்தமாக மன்னார் பிரதேச சபைக்கு சட்ட விரோத கட்டட நிர்மாணங்களால் ஒரு கோடியே 2 லட்சத்து முப்பத்து ஆறாயிரத்து ஐனூற்று பதினொரு ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சட்டவிரோத வீட்டுதிட்ட நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபை வழங்கியுள்ள ஆவணத்தில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக கிடைத்த நிதியை பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீட்டு திட்டங்களே அதிகம் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக தலைமன்னார் பகுதியில் காணி சீர்திருந்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட றிசாட்சிற்றி 400 வீடுகளினால் பதின்னான்கு லட்சத்து பதினாறாயிரம் ரூபா கிடைக்கபெறவில்லை, மேலும் பெரிய கரிசல் பகுதியில் அரச காணியில் அமைக்கப்பட்ட 100 வீட்டு திட்டம் பெரிய கரிசல் 50 வீட்டு திட்டம் பேசாலை 25 வீட்டு திட்டம் மற்றும் சயிட் சிட்டி வீட்டு திட்டம் போன்றன உரிய அனுமதி இன்றி அமைக்கப்பட்டமையினால் பத்துலட்சத்து நாப்பத்து நாளாயிரத்து முன்னூறு ரூபா இதுவரை பிரதேச சபைக்கு கிடைக்கபெறவில்லை எனவும் கூறப்படுகின்றது.

தாழ்வுபாடு துருக்கி சிட்டி 100 வீடு குடியிருப்பு

இதே போன்று தாழ்வுபாடு துருக்கி சிட்டி 100 வீடுகளை கொண்ட குடியிருப்பும் உரிய அனுமதி இன்றி அமைக்கப்படமையினால் அனுமதி கட்டணம் ஊடாக பெறப்படவேண்டிய பாரிய நிதி பல வருடங்களாக கிடைக்க பெறாமல் உள்ளது. அதே நேரம் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட கட்டிடங்களுக்கான அனுமதியை பெறுவதில் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்களும் அவ் வீட்டு திட்டங்களில் வசிக்கும் மக்களும் அக்கறை செலுத்தவில்லை என்பது பிரதேச சபையின் ஆண்டு அறிக்கையின் ஊடாக தெளிவாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டட தொகுதியை இலங்கையின் நகரதிட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சர்,பிரதேச சபை தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் இணைந்து திறந்து வைத்துள்ளமை மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்சியாக இவ்வாறு அனுமதி இன்றி வீட்டு திட்டங்கள் அமைக்கப்படுகின்றமையினால் பாரிய அளவு பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கப்பெறாமல் உள்ளது அது மாத்திரம் இல்லாமல் இவ்வாறான தொடர் சட்டவிரோத கட்டுமானங்கள் இடம் பெற்று வரும் போதும் அவற்றை தடுத்து நிறுத்துவதில் மன்னார் பிரதேச சபை அக்கறையீனமாக செயற்படுவதாகவும் 1978 ஆம் ஆண்டு 41 இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் சட்டவிரோத கட்டுமாணங்களுக்கான தண்டப்பணம் பெறுவதற்கும் அல்லது 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் சட்டவிரோத கட்டடங்களை இடித்தழிப்பதற்கும் பிரதேச சபைக்கு அதிகாரம் காணப்படுக்கின்ற போது அவற்றை செய்வதில் பிரதேச சபை கவனம் செலுத்தவில்லை என பிரதேசசபையின் 2018,2019 கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

இதே போல் மத்திய கிழக்கு நாடு ஒன்றின் நிதி உதவியுடன் மன்னார் பேசாலை பிரதான வீதியில் கரிசல் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டமானது மன்னார் பிரதேச சபையின் உரிய அனுமதி இன்றியும் பிரதேச சபையின் ஆலோசனை எவையும் பெறப்படாமல் அமைக்கப்பட்டதுடன் அதில் தற்போது மனிதர்கள் வசிக்க முடியாத நிலை காணப்படுவதுடன் வெள்ள நீரில் அக்கிராமம் முழுவதும் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.

இதனால் பெரும் நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019,2020 ஆண்டு காலப்பகுதியில் முன்னால் வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் 3000 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பகுதி அளவிலும் அத்திவார அளவிலும் வீடுகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பல ஆயிரக்கனக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிதி எப்போது விடுவிக்கப்படும் என அவர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் நிலையில் இவ்வாறு முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களின் பாரிய நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை பகுதிகளில் அமைக்கப்பட்ட பல வீட்டு திட்டங்களும் பல வீடுகளும் மக்கள் குடியேராத நிலையில் காணப்படுவதாகவும் சிலருக்கு இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும் பலர் வீட்டு திட்டங்களுக்கு அருகில் அத்தியாவசிய சேவைகள் எவையும் இன்மையால் புத்தளத்தில் வசிப்பதுடன் இப் பகுதிக்கு நீண்ட விடுமுறை நாட்களில் மாத்திரமே வருவதாகவும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிகாமநாதன் தெரிவிக்கின்றார்.

அனுமதி பெறுவதற்கான நினைவூட்டல் கடிதம்

மேலும் பிரதேச சபை தீர்மானத்தின் ஊடாக இவ்வாறான அனுமதி பெறாத வீட்டு திட்டங்களுக்கான பிரதேச சபையின் அனைத்து விதமான சேவைகளையும் நிறுத்துவதற்கான செயற்பட்டை முன்னெடுக்கவுள்ளதாகவும் அனுமதி பெறுவதற்கான நினைவூட்டல் கடிதங்களை அவ் வீடுகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பிவத்கற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அமைக்கப்படும் வீட்டு திட்டங்கள் தொடர்பில் மாவட்ட செயலகத்திலோ பிரதேச செயலகங்களிலோ பிரதேச சபைகளிலோ எந்த ஒரு பதிவுகளும், ஆவணங்களும் பெரும்பாலும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

இவ்வாறான நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு எனும் நல் நோக்கத்துக்கு கிடைக்கும் இவ்வாறான உதவிகளை நாங்கள் எப்போதும் வரவேற்கின்றோம். ஆனாலும் முஸ்லிம் மக்களை காரணம் காட்டி பணத்தை பெற்று தங்களின் அரசியல் இலாபத்திற்காக மக்கள் வசிக்க முடியாத இடங்களிலும் அதே நேரம் பிரதேசபையிடம் உரிய அனுமதி பெறாமல் இவ்வாறு வீடுகளை அமைத்து அதில் சுயலாபமும் அதே நேரம் அதிகார துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் ஒரு போதும் ஏற்கபோவதில்லை என மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அந்தோனி தற்குரூஸ் லுஸ்ரின் தெரிவிக்கின்றார்.

மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு உரிய அனுமதிகள் இன்றி தொழில்நுட்ப ஆலோசனைகள் பெறாது அரச அமைச்சுக்களிலும் அரச கட்சியிலும் அங்கத்துவம் உண்டு என்ற ஒரே காரணத்தினால் அதிகாரத்தை கையில் எடுக்கும் ஒரு சில அரசியல் வாதிகளாலும் அவர்களின் உள்ளூர் நிர்வாகிகளாலும் இடைத்தரகர்களாலும் பொது மக்களின் நன்மைக்கு என நன்கொடையாக வழங்கப்படும் பல இலட்சம் ரூபா வீடுகளில் தற்போது கழுதைகளும் மாடுகளும் அடைக்கலம் புகும் நிலையே காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான பின்னனியிலேயே மீளவும் பிரதேச சபையிடம் உரிய அனுமதி பெறாது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடான குவைத்தின் நிதியை பெற்று எருக்கலம் பிட்டி பகுதியில் யுத்தத்திற்கு பிற்பாடு மீளக்குடியேறியுள்ள மக்களுக்கென அமைக்கப்பட்ட மேற்படி “குவைத் விலேஜ்” வீட்டுத்திட்டமானது மின் இணைப்பு , நீர் இணைப்பு,வீதி,வடிகால் அமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ஒழுங்கான முறையில் பூரணப்படுத்தப்படாத நிலையில் அவசர அவசரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் உத்தியோக பூர்வமாக அங்குராட்பணம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.