தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபும் மாவட்ட சம்மேளனம் வியாழக்கிழமை (01) அனுராதபுரம் இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் தலை தூக்கும் என யாரும் நினைக்கவில்லை.
என்றாலும் 2001இல் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் பிரதமரானார்.
அதன் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இன்று நாட்டின் பிரதான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு முழு உலகுக்கும் தெரியும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.
அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி, அவரை பிரதமராக்கி, ஜனாதிபதியாக்கியது போன்று அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக நியமித்தே தீருவோம். அதுதொடர்பில் சந்தேகம் கொள்ளவேண்டாம்.
ஏனெனில் விழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங் மாத்திரமே முன்வந்து, நாட்டை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தார். அதனால் எங்களையும் நாட்டையும் மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை.
அத்துடன் நாட்டை மீட்கும் இந்த பயணத்தை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும்போது ராஜபக்ஷ்வினரை பாதுகாக்க செயற்படுவதாக எங்களை விமர்சிக்கின்றனர். ராஜபக்ஷ்வினரை மாத்திரமல்ல, அனைவரையும் இணைத்துக்கொண்டு முழு நாட்டு மக்களையும் பாதுகாக்கவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார்.
என்றாலும் திருடர்களை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவோ ஐக்கிய தேசிய கட்சியோ தயாரில்லை. திருடர்களுடன் பாராளுமன்றத்தில் இருப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம் செய்துவருகிறார். ஆனால் ரணில் விக்ரமசிங்க திருட்டை ஒழிக்க தேவையான சக்திவாய்ந்த சட்ட திடடங்களை கொண்டுவந்திருக்கிறார்.
அதேபோன்று நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் தெரிவித்து வருகின்றன.
ஆனால் சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மாறாக யாருடைய உரிமையையும் மீறவில்லை. அமெரிக்காவில் இன்று அதிகரித்துவரும் கொலை, தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது.
எனவே ஆளுமையும் அனுபவமும் உள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே இந்த நாட்டையும் மக்களையும் மீள கட்டியெழுப்ப முடியும்.
அதனை கடந்த ஒன்றரை வருட காலத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளினால் வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.