அரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசாங்கம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் எதிர்காலத்தில் செயற்படுமாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை அவர்கள் செய்யமாட்டார்கள். இதனை கடந்த கால வரலாறு தெளிவுபடுத்துகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்று 2 வருடங்களாகும் நிலையில் முதன்முறையாக ஐ.நாவின் பொதுச் செயலாளரை சந்தித்து பல்வேறுபட்ட விடயங்களை கலந்துரையாடியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இதன்போது தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்களை விடுவித்தல், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஐ.நாவுடன் இணைந்து செயற்படுவோம் என்றும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக பல மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்குவது தொடர்பாகவும், அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உள்ளக ரீதியாக புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக ஜனாதிபதியில் இருந்து கீழ் மட்டம் வரை வெளிநாடுகளுக்கு கொடுக்கின்ற செய்திகள் என்பது மிக மிக தவறான பிழையான செய்திகளாகவே காணப்படுகின்றன.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற பெற்றோர்கள் பலர் இறந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் கூட அவர்களை அழைத்து காணாமலாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ன நடந்தது என்பது பற்றி பேசுவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை.

அண்மையில் ஒரு விடயம் ஒன்றை ஜனாதிபதி கூறியிருந்தார். “காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆய்வுகளும் விசாரணைகளும் இனிமேல் தேவையில்லை என்றார்” அவர் தான் மரணச் சான்றிதழ் கொடுக்க இருப்பதாகக் கூறுகின்றார். ஆகவே காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மிக சூசகமாக கூறியுள்ளார் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி இருக்கின்றது.

எனவே, ஜனாதிபதி ஐ.நாவின் செயலாளருடன் பேசிய விடயங்கள் இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெளிவாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் காணாமலாக்கப்பட்டோருடைய பெற்றோரின் போராட்டங்கள் சில சமயம் முடிவுக்கு வரலாம். இது தொடர்பாக சர்வதேச சமூகம் விசாரிக்க இருக்கிறதா இல்லையா என்பதை அறியலாம். ஏறத்தாழ 16,000 பேருக்கு மேற்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவார்களா நடத்தமாட்டார்களா என்பதை அறியக்கூடியதாக இருக்கும்.

காணாமலாக்கப்பட்டவர்களை கூட்டிச் சென்றமைக்கு சாட்சிகள் உள்ளன. அவ்வாறானவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை என பல உறவினர்கள் நம்புகிறார்கள். இது சம்பந்தமாக ஜனாதிபதி நாடு திரும்பியதும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கூற வேண்டும்.

நஷ்டஈடு கொடுப்பதாக இருந்தால் அந்த நஷ்டஈடு என்பது ஒரு சர்வதேசத் தரத்துக்கு ஏற்ப கொடுக்கப்படுமா? அல்லது இலங்கையில் 1 லட்சம் 2 லட்சம் ரூபாவை கொடுத்து அவர்களை ஏமாற்ற போகின்றார்களா என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். நஷ்டஈடு கொடுக்கும் போது நிச்சயமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச தரத்துக்கு ஈடாக அது வழங்கப்படவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. ஆகவே, இந்த விடயங்களில் தெளிவுபடுத்தினால் நஷ்டஈடு வாங்க விரும்பக்கூடிய பெற்றோர்கள் அனைவரும் எங்களுக்கு எவ்வளவு நஷ்டஈடு கிடைக்கும் என்பதை அறியக்கூடியதாக இருக்கும்.

வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியின் ஒரே விதமான கதைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கின்றனர். நாங்கள் இதனை பார்ப்போமானால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக தோற்றப்பாட்டை காட்ட முயற்சிக்கின்றது.

சாதாரணமாக 2 நாட்டு ஜனாதிபதியோ வெளிவிவகார அமைச்சரோ சந்திக்கும் பொழுது கூட்டறிக்கை விடுவது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். அது 2 தரப்பும் பல்வேறுபட்ட விடயங்களை ஏற்றுக்கொண்டால் ஒத்துக் கொண்டால் அவற்றை கூட்டாக வெளியிடுவர்.

இங்கு இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விடயத்தை மாத்திரம் ஒரு தரப்பு மாத்திரமே சொல்கிறது. அதாவது இலங்கை ஜனாதிபதியின் தரப்பு, நாங்கள் என்ன பேசினோம் அவர் என்ன பதில் சொன்னார் என்ற விடயங்களை குறிப்பிடுகின்றது.

அரசாங்கம் தான் சொன்னபடி எங்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் எதிர்காலத்தில் செயற்படும் ஆக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை அவர்கள் செய்யமாட்டார்கள் என்பதை கடந்த கால வரலாறு தெளிவுபடுத்துகின்றது என்றார்.