அரச தலைவர் கோட்டாபயவின் அறிவிப்பை மீறி இருவர் கைது

பொதுமக்களின் போராட்டங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தப்படவில்லை என அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச அறிவித்த நிலையில், நாட்டில் போராட்டங்களை நடத்த முடியாது எனக் கூறி கைது செய்யப்பட்ட இரண்டு சிறு வர்த்தகர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ( 20) ஐக்கிய சுயதொழில் தொழிற்சங்கத் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவரை தலா 50,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

அரச தலைவர் கோட்டபாய ராஜபகச் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்செயலாளரிடம் பொது மக்களின் போராட்டங்களில் தனது அரசாங்கம் தலையிடாது எனக் கூறியிருந்தார்.

நாடு முடக்கப்பட்டுள்ளபோதிலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதைப் போலவே தங்களையும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் எனக் கோரி கோட்டை புகையிர நிலையம் முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஐக்கிய சுயதொழில் வர்த்தகர் சங்கம், ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களையும் கோட்டை பொலிஸார் கைது செய்தனர். தான் கொரோனா சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி போராட்டத்தை முன்னெடுப்பதாக பொலிஸாரிடம் சார்ள்ஸ் பிரதீப் குறிப்பிட்டபோதிலும், , “அவ்வாறு செய்ய முடியாது” என அங்கு வந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிடும் காணொளி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த இருவரும் சுகாதார விதிகளையும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தையும் மீறி ஆரர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்ய விரும்புவதால் இரண்டு சந்தேகநபர்களையும் சிறை வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தங்கள் வாடிக்கையாளர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறாத வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர், இரண்டு சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டாரஸை சந்தித்த, அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, தன்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை எனவும், போராட்டக்காரர்களுக்கென்றே, தன்னுடைய அலுவலகத்துக்கு முன்னால் தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.