அண்மையில்விடுதலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட எட்டுப்பேரில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நான்கு பேரினதும் விடுதலையில் உள்ள தடங்கல்களை நீக்கி விரைந்து விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கையினை முன் வைத்தார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இன்று (10) வியாழக்கிழமை இடம்பெற்ற பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதியமைச்சர் அவர்களுக்கு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது வரவேற்கத்தக்கது. இனப்பிரச்சினையைத் தீர்ப்தற்காக அனைத்து கட்சிகளையும் அழைத்து அதற்குரிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
தந்தை செல்வாவினுடைய காலம் முதல் வடகிழக்கிலுள்ள அனைத்து கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலானதீர்வினையே வலியுறுத்தி வந்ததை இங்கே குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.அண்மையிலே வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 100 நாள் போராட்டத்தை நடாத்தி முடித்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்றாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன் வைத்துள்ளார்கள். 13 ஆவது திருத்தச்சட்டத்திலே உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
நல்லிணக்க அடிப்படையில் அரசியல் கைதிகள் எட்டு பேரை விடுதலை செய்துள்ளீர்கள். அவர்களில் நான்கு பேரே விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்துள்ளார்கள்.அவர்கள் விடுதலை செய்யப்பட்டு பத்து நாட்கள் கடந்துள்ளன. ஏனைய நான்கு பேரில் இருவரை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த இருவருக்குமான புனர்வாழ்வினை நீதியமைச்சர் என்ற வகையில் அதனை ரத்து செய்து அவ்விருவரையும் விரைந்து விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன். ஏனைய இருவரையும் நீதிமன்றில் உள்ள வழக்குகள் மீள்ப்பெறப்பட்ட பின் விடுதலை செய்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே எட்டுப்பேரில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நான்கு பேரினதும் விடுதலையில் உள்ள தடங்கல்களை நீக்கி விரைந்து விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
கிறிஸ்மஸ் பண்டிகை வரவுள்ளது. அதற்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். அதன்மூலம் அரசாங்கம் நல்லிணத்திற்காக வெளிபடுத்தும் நல்லெண்ண சமிக்ஞையாக பார்க்கக் கூடியதாக இருக்கும்.
அரசியல்கைதிகள் விடயத்தில் நீங்கள் நல்ல முடிவினை எட்டியுள்ளீர்கள். அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என தெரிவித்துக்குக் கொண்டு நன்றிகளையும் கூறிக் கொண்டு ஏனையவர்களையும் வெகுவிரைவிலே விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அண்மையிலே ஜனாதிபதி, சிறு தானிய பயிர்ச் செய்கைகள் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்காக வன இலாகா வசம் உள்ள விவசாய நிலங்களை விடுவிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் வன்னி மாவட்டத்திலே குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலே மக்கள் உழுது பண்படுத்திய நிலங்களை விதைப்பதற்கு முன்னராக வன இலாகாவினர் அங்கு சென்று அந்த நிலங்களிலே பெரு மரங்களினை நடுவதற்கு முயற்சிக்கின்றார்கள். அமைச்சர் மகிந்தானந்த அளுத்த்கமமே அண்மையில் வவுனியா சென்ற போது வன இலாக வசம் இருக்கும் விவசாய நிலங்களை விடுவித்து பயிர்ச் செய்கை செய்வதன் ஊடாக பெருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் குடும்பங்களை மேலும் முன்னேற்ற முடியும் என வாக்குறுதியும் வழங்கியிருந்தார் எனவே அமைச்சர்யும், ஜனாதிபதியும்அவர்கள் இதனை கருத்தில் எடுத்து விரைந்து ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். விவசாயிகள் விவசாயம் செய்ய மிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் வன இலாகா போன்ற திணைக்களங்கள் அவர்களுக்கு தொடர்ச்சியாக தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே விவசாய உற்பத்தித்துறையினூடாக பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.
குடிவரவு,குடியகல்வு திணைக்களங்கள் வடக்கிலே கிளைகளைத் திறந்து கடவுச் சீட்டு வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். இணைய வழி ஊடாக விண்ணப்பிப்பவர்களுக்கு மூன்று நான்கு மாதங்கள் கழித்து அவர்களுக்கு திகதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சில இடைத்தரகர்கள் மக்களிடம் ஒரு கடவுச்சீட்டுக்கு இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம் வாங்கிக் கொண்டு கடவுச்சீட்டினை உடனடியாக பெற்றுக் கொடுக்கிறார்கள். பணம் இருப்பவர்கள் இலஞ்சம் வழங்கி அதனை இடைத்தரகர்கள் மூலமாக பெற்றுக் கொள்கின்றார்கள். வெளிநாட்டிலுள்ள மக்கள் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக தூதரங்களூடாக கடவுச்சீட்டை அனுப்பி வைக்கும் போது தூதரகங்கள் ஆவணங்களை சரி பார்த்தே விண்ணப்பங்களை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இங்கே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இருப்பவர்கள் விண்ணப்பத்தில், ஆவணங்களில் பிரச்சினை இருப்பதாக புலம்பெயர் மக்களிடம் கூறி ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரை இலஞ்சமாகப் பெற்று குறித்த கடவுச் சீட்டினை விடுவிக்கிறார்கள். ஒரு சில அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் . என்றார்