ஆர்மேனிய இனப்படுகொலை தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு காட்டிய பாதை – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

“இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது என்றும் கூறிவரும் எமது பிரதிநிதிகளில் சிலருக்கு பாடமாக ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலையை 31 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளமையை குறிப்பிடலாம்” என ரெலோ அமைப்பின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“ஈழத் தமிழர்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை உட்பட அட்டூழிய குற்றங்களுக்கு நீதிகோரி சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்ததோடு மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் அது வலியுறுத்தப்பட வேண்டும் என்று அங்கத்துவ நாடுகளிடம் கோரி வருகின்றனர். முன்னைய மனித உரிமை ஆணையாளர்கள் அதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் என்று தம்மை கூறும் சிலரும் இனப்படுகொலைக்கான ஆதாரம் இல்லை என்று கூறி வருகின்றனர்.

ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் திரட்டப்படும் சாட்சியங்களின் ஊடாக எம் மக்களிடம் இருக்கும் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதி பொறிமுறையின் ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது என்றும் கூறிவரும் எமது பிரதிநிதிகளில் சிலருக்கு பாடமாக ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலையை 31 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளமையை குறிப்பிடலாம்.

1916ஆம் ஆண்டுகளில் துருக்கிய பேரரசை புரட்சி மூலம் கைப்பற்றிய புரட்சிப் படையினர் தங்கள் ராணுவத்தில் இருந்த ஆர்மேனியர்களையும், விடுதலை கோரிய ஆர்மேனிய மக்களையும் படுகொலை செய்ததோடு அவர்களில் பெரும்பகுதியினரை சிரிய நாட்டிற்கு துரத்தி விட்டார்கள். அந்த மக்களை நாடுகடத்துவதற்கு உதவிய குர்திஷ் துணை ராணுவப்படையினர் ஆர்மேனிய மக்களை கற்பழித்தும், கொள்ளையடித்தும், கொலை செய்தனர். இயற்கை அனர்த்தங்கள், நோய், பட்டினியாலும் பலர் இறந்தனர். கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். பலர் துருக்கியில் தப்பியும் உள்ளனர். பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்கள் வழித்தோன்றல்கள் இன்று புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆர்மேனியா சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்தாலும் தமக்கு நடந்த கொடுமைகளை இனப்படுகொலையாக கருதி ஆர்மேனியர்கள் நீதிகோரி போராடினார்கள். இனப்படுகொலைக்கான ஆதாரமில்லை என்று துருக்கி தொடர்ந்தும் மறுத்து வந்தது. துருக்கியின் ஆதரவு நாடுகளும் அதை தவிர்த்து வந்தனர். ஆனால் அவர்களுடைய போராட்டம் இன்று ஒரு நூற்றாண்டைக் கடந்தாலும் வெற்றி அடைந்து உலக நாடுகள் துருக்கியில் ஆர்மேனியர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டுள்ளன. அதன் முக்கிய அம்சமாக குர்திஷ் துணைப் படையினர் ஆர்மேனிய மக்களுக்கு இளைத்த அட்டூளியங்களை துருக்கி அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்ததே, துருக்கி செய்த கொலைகளுக்கு சமமான மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அன்று துருக்கிக்கு ஆதரவாக இருந்த ஜெர்மனி கூட இந்த குற்றங்கள் நடப்பதை தெரிந்தும் அதை தடுக்காமல் இருந்தது குற்றமாக கருதப்படுகிறது.

ஆகவே ஈழத் தமிழர்களுக்கு நடந்த அட்டூழிய குற்றங்களில் இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறி வருபவர்களும் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று கூறுபவர்களும் கூட குற்றவாளிகள் என்று கருதப் படுவதற்கு இடம் உண்டு.

இன்று சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் இனப்படுகொலை என்பது விரிவுபடுத்தப் பட்ட அர்த்தங்களை கொண்டிருப்பதனால் ஈழத் தமிழர்களுடைய இனப்படுகொலை விவகாரத்தையும் நீதிப் பொறிமுறை முன் நிறுத்த முடியும் என்பதை ஆர்மேனியா தீர்மானத்தின் முலம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேபோன்று இங்கு நடந்த இனப்படுகொலையை மறுப்பவர்கள் மட்டுமல்ல கண்டும் காணாமல் இருந்தவர்கள் கூட இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய காலம் வரும் என்பதையும் ஆர்மேனியர்களுக்கான நீதி எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களின் கோரிக்கை ஒருமித்த குரலில் தொடர்ச்சியாக ஒலிக்குமிடத்து பூகோள அரசியல் நலன்களை தாண்டி வெற்றி பெறும் என்பதற்கும் சிறந்த எடுத்துக் காட்டு” என சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுரேந்திரன்
ஊடக பேச்சாளர்/ தேசிய அமைப்பாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்