ஆலயம் என்ற போர்வையில் மதபோதகர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அரசிற்கு சொந்தமான நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு எமது சமூகம் செய்தி பிரிவிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
இன்று தாம் முன்னெடுத்துள்ள போராட்டமானது மதங்களுக்கு எதிரானது அல்ல எனவும் மாறாக மதங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான நடத்தைகள் மற்றும் சட்டவிரோதமான மதமாற்றங்களுக்கு எதிரான போராட்டம் என்றும் தியாகராஜா நிரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த கட்டிடத்தினை உரிய திணைக்களம் மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தியாகராஜா நிரோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.