வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 11 வது தேசிய மாநாடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முன்னதாக கட்சியின் கொடியேற்றப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து பொதுமக்களுக்கும், போராளிகளுக்குமாக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் மாநாட்டுப் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தம் கருணாகரம், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் தாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் : செல்வம் எம்பி வலியுறுத்து

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(23) இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். அதிபர் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்கமாட்டார்கள் அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம். பொது வேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும்.

ஒருவரை நிறுத்திவிட்டு சொற்பவாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடாகவே அந்த‌ விடயத்தை செய்யவேண்டும்.

நாளையதினம் எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம் எனவே அரசியல் கதிரைகளுக்காக வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.

எம்மை பொறுத்தவரை இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் எமது மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலைமை ஏற்ப்படும். அத்துடன் சர்வதேசத்தின் பார்வையினையும் பெறமுடியும்.

இதன்போது தென்னிலங்கை எங்களை பார்த்து அச்சப்படும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

எம்மை பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியினை நாம் ஒதுக்கிவிட முடியாது. பிரச்சனை தொடர்ந்து இருக்கின்றது.

இந்த ஒற்றுமைக்குள் நாங்கள்கொண்டு வரவேண்டும். ஆனால் பொதுச்சின்னம் என்பதே எமது கருத்து. பொதுச்சின்னமாக குத்துவிளக்கு அமைந்திருக்கின்றது.

அவர்களோடு பேசி பொதுச்சின்னத்தின் கீழ் அணிதிரள்வதற்கான முயற்சியினை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்ளுவோம், தனிப்பட்ட கட்சியின் கீழ் எமது ஒற்றுமை இருக்காது என்றார்.

ரெலோவின் பொதுக்குழுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வவுனியாவில் இடம்பெற்றன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  11 ஆவது தேசிய மாநாட்டிற்கான கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நிர்வாக தெரிவும் ஜனநாயக முறையில் 23-03-2023 இன்றைய தினம்‌ இடம்பெற்றது.

 

 

 

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) திங்கட்கிழமை கொழும்பில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம் மற்றும் மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டி அவர்களும் ரெலோ சார்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் /பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதானமாக, நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையினுடைய கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவினுடைய பங்கு என்பன தற்கால அரசியல் விடயங்களோடு பேசப்பட்டன.

மனித உரிமை பேரவையின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ரெலோ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் உடைய அரசியலமைப்பு நாட்டின் சாபக்கேடு – சபா.குகதாஸ் தெரிவிப்பு

இலங்கையானது பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறையே காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மவட்ட பொறுப்பாளரும், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1978 ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்புடன் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறைதான் இந்த நாடு இவ்வளவு தூரம் பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு காரணமானது.

இந்த உண்மை தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளாலும் ஐனாதிபதி வேட்பாளர்களினாலும் பேசு பொருளாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்தவுடன் மேலதிக நிறைவேற்று அதிகாரங்களை பலப்படுத்துவதில் ஐெயவர்த்னா முதல் கோட்டாபய வரை குறியாக இருந்துள்ளனர்.

இலங்கைத்தீவில் வாழும் சகல இனங்களுக்கும் நியாயமான அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு தடையாக இருப்பது இந்த சர்வ அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறைமை தான்.

அத்துடன் கடந்த காலத்தில் நாடு பெரும் யுத்த அழிவுகளையும் இனங்களிடையே குரோத எண்ணங்கள் மேலோங்குவதற்கும் இனங்களிடையே சந்தேகங்கள்இ பயங்கள் ஏற்படுவதற்கும் காரணமானது.

தமிழர்களின் அரசியல் அதிகாரங்கள் இருப்புக்கள் பறிபோவதற்கும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளை தமிழர் தரப்புக்குள்ளேயே உருவாக்கி மேலோங்கச் செய்வதில் பக்க பலமாக இருந்தது இருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையே ஆகும்.

நாட்டில் அதிகார துஸ்பிரையோகம்இ சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனத் தன்மையை இழத்தல் இ மாகாணங்கள் ஆளுநர்களால் ஐனாதிபதிமாரின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆழப்படுதல் இ தேசியக் கொள்கைகள் ஆட்சிகள் மாற நிலையான தன்மையை இழத்தல்இ அயல் உறவுக் கொள்கைகள் மாற்றம் அடைதல் போன்றன நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறையால் நாட்டை மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன் உள் நாட்டு அரசியல் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவேஇ நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நிலையான அபிவிருத்திக்கும் இனங்களிடையேயான நல்லிணக்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு நீக்கப்பட்டு அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியலமைப்பே அவசியம் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது! – நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ்

மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீர்வேலியில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் அவை தீர்மானம் உள்ளிட்ட  பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டேன். இந்நிலையில் ஏற்கனவே நீர்வேலியில் தபாலகத்திற்கான கட்டிடத்தினை தனது கொடையாக அமைத்து வழங்குவதற்கான செயற்றிட்டத்தினை ஆரம்பித்திருந்த தொழிலதிபர் கிருபாகரன் அவர்கள் தமிழ் முற்றத்தினை அமைத்து அதில் பெரியார்களின் சிலைகளை நிறுவும் பொறுப்பினையும்  தானே முன்வந்து  ஏற்றுக் கொண்டு அதனை தற்போது அவர் முழுமையாகச் செயற்படுத்தியுள்ளார். அவரது முற்போக்கான கொடை எண்ணத்திற்கும் செயற்பாட்டுக்கும் பாராட்டுக்கள்.

இதற்காக அவருடன் உழைத்த ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன் தலைமையில் குழுவினர்க்கு நன்றிகள். இன்றைய கால கட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பல நிதி பற்றாக்குறை மற்றும் அவற்றை செயற்படுத்துவதில் உள்ள செலவீனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவற்றை நிர்வாக ரீதியில் சட்ட திட்டங்களுக்கு உள்ளாக அணுவதில் காணப்படும் தாமதங்கள் வாயிலாக விரைவாக ஈடேற்றுவதில் இழுபறிகள் உள்ளன.

இந் நிலையில் மக்களுக்கு வேண்டிய எமது இனத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு போன்றவற்றினை நிலைநிறுத்தத் தக்க செயற்றிட்டங்களை கொடையாளர்களிடம் கையளித்து அவற்றை மக்கள் மயப்படுத்துவது சிறந்த உத்தியாகும். அரச நிறுவனம் மேற்கோள்ளும் அபிவிருத்தியில் பங்கேற்பு அபிவிருத்தி என்பதற்கு மேலாகச் சென்று மக்களின் பங்களிப்பாக அபிவிரு;தியை முன்கொண்டு செல்வதும் அவசியமாகவுள்ளது. அது தனவந்தர்கள் கொடையாளிகளை கிராம மட்டத்தில் இணைப்பதாக அமையும்.

இதேநேரம் இன்று பலர் அரச தாபனங்களுக்கு தமது சொத்துக்களை நன்கொடை அளிக்க முன்வருகையில், அவ்வாறான சூழ்நிலைகளில் மத்திய அரசாங்கம் சார்ந்த தாபனங்களுக்கு அன்பளிப்பது இன முரன்பாடும் பல்வேறு பட்ட ஆக்கிரமிப்பினையும் எதிர்கொள்ளும் இனம் நாம் என்ற வகையில் சரியான தீர்மானம் இல்லை. மேலும், மத்திய அரசின் தாபனங்கள் கொழும்பு மட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படலாம். ஆனால், உள்ளுராட்சி மன்றத்திற்கு நிலங்களை அன்பளித்தால் அதில் எமது மக்கள் பிரதிநிதிகளின் முடிவே செல்வாக்குச் செலுத்தும். மத்திய அரசு சார்ந்த தாபனங்களுக்கு காணித் தேவை காணப்படின் அவற்றை உள்ளுராட்சி மன்றங்களுக்கு கையளித்து குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் மத்திய அரசின் தாபனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். இதன் வாயிலாக எமது நிலம் சார்ந்த இன ரீதியிலான பாதுகாப்பினை நாம் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். a

தமிழரசு கட்சியையும் இணைத்து பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தயார்- செல்வம் எம்.பி

தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பொதுச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே, நாங்கள் தமிழரசுக் கட்சியின் தனிச் சின்னத்தில் நாங்கள் பயணித்தோம். பல வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பயணித்தோம்.

உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என்று அவர்கள் வெளியில் சென்றதன் காரணமாக நாங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என்ற காரணத்தினால் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றோம்.

எங்களை பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் பொதுச் சின்னம் ஒன்றில் பயணிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரனின் கூற்றை நான் வரவேற்கின்றேன். ஒரு பொதுச் சின்னத்தில் நாங்கள் அனைவரும் அணிதிரள்வோம்.

பொதுச்சின்னத்திற்கு வீட்டுச் சின்னம் கூட மாற்றப்பட்டால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.தனிப்பட்ட கட்சிக்குள் கூட்டாக இருப்பது நன்றாக அமையாது. பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை சிங்களவர்களிடம் தாரை வார்க்கப்பட்ட தினம் – சபா குகதாஸ்

பெப்ரவரி 4 திகதி ஈழத் தமிழர்களை பொறுத்த வரை தங்களது சுயநிர்ணய உரிமையை பிரித்தானியர்கள் பறித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்த தினமாகவே பார்க்கின்றனர். அத்துடன் தங்களின் சுதந்திரம் பறிபோன கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானிய காலணிதித்துவம்  இலங்கைக்கு வரும் போது இரண்டு தேசங்களில் சிங்களவரும் தமிழர்களும் தனித்தனியாக தங்களது சுயநிர்ணய உரிமையுடன் தன்னாட்சியை நடாத்தி கௌரவமாக வாழ்ந்தனர். ஆனால் 1815 ஆண்டு கண்டி ராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் பல ராச்சியங்களாக இருந்த நாட்டை ஒற்றையாட்சி அரசியலமைப்பான கோல்புறுக் யாப்பை 1833 இல் நடைமுறைக்கு கொண்டு வந்து ஒற்றையாட்சி நாடாக பிரகடனப்படுத்தினர்.

கோல்புறுக் யாப்பில்  இருந்து சோல்பரி  அரசியலமைப்பு வரை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்திய பிரித்தானியர், சுதந்திரம் என்ற பெயரில் பல இன மக்கள் வாழும் நாட்டை தங்களுடைய பூகோள நலனுக்காக ஒற்றையாட்சி முறைக்குள் ஒரு இனத்திடம் ஆட்சியை ஒப்படைத்தமை ஏனைய இனங்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதற்கு வழி கோலியது. இதனால் தமது இறைமையை இழந்த இனமாக ஈழத் தமிழர்கள் மாறியதுடன் சுதந்திரத்தை பறி கொடுத்தவர்களாகவும் அவலப்படுகின்றனர் இதனால் தமிழர்களுக்கு பெப்ரவரி 4 சுதந்திர தினம் என்பது கரி நாளாகவே அமைந்துவிட்டது.

தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் – ரெலோ செயலாளர் நாயகம் கோ.கருணாகரம் எம்.பி

தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் தாய்க் கட்சி தாங்கள்தான் என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு அரசியல் இருந்தது.

நாங்கள் ஆயுத ரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம். 2009 இற்குப் பின்பு ஆயுத ரீதியாக நாங்கள் செயற்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2004 ஆம் அண்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியமான கட்சியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்றார்கள்.

அப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

2009 இங்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்குக் காரணமும் கூட அக்கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான். இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.

அக்கட்சியின் தலைவர்கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். செயலாளர் மற்றும் ஏனைய நிர்வாகங்களுக்கான தெரிவுகள் கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள்.

இந்த நிலையில் ஒன்றை தமிழரசுக் கட்சி உணரவேண்டும். தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும்.

அக்கட்சிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

மக்களை அடக்கி ஒடுக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் – கோ. கருணாகரன் (ஜனா)

இலங்கை பாராளுமன்றத்தில் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றன. 1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே இந்த சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டு, இதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (27) கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறையை எதிர்த்து, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக 6 மாதத்துக்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டம் இன்று வரை தொடர்ச்சியாக இருக்கின்றது. இந்த நிலையில் ஊடகங்களையும் மக்களின் கருத்து சுதந்திரத்தையும் அடக்குவதற்காக இந்த நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கை உயர்த்தி ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்காக தான் இச்சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றதோ என சந்தேகங்கள் எழுகின்றன. ஏனென்றால், கூடுதலான ஆர்ப்பாட்டங்கள் நில அபகரிப்புகள், காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் வட கிழக்கில் அதிகமாக இடம்பெறுகின்றன.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின் ஒரு மௌன யுத்தம் வடகிழக்கை பௌத்த மதமாக்குவது, காணி அபகரிப்புக்கு பெரும்பான்மையான மக்களை குடியேற்றி எமது இன பரம்பலை குறைப்பதுமான ஒரு நிகழ்ச்சி நிரலில் அரசும் அரச அதிகாரிகளும் புத்த பிக்குகள் கூட உள்வாங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இப்படியான காலகட்டங்களில் வட கிழக்கிலே மக்கள் கிளர்ந்து எழக்கூடாது என்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

இந்நாட்டின் அரகலய போராட்டம் என்ற போராட்டங்கள் கூட இனி ஏற்படக் கூடாது எனவும் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து கூறக்கூடாது என்றும் அரசு நினைக்கிறது.

ஒன்றை மட்டும் இந்த அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றிருக்கும் அரசு நாளை மாறலாம். நாளை மாறும்போது தனக்கு சாதகமாக தற்போது இருக்கும் அரசு அங்கத்துவம் பெறுபவர்கள் கூட இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்படலாம்.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் கை உயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்கள் கூட இன்னொரு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இச்சட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்பதை உணராமல், அவர்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட, ஊடக கலையகங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. முப்பது நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யாருக்குமே இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்று கூட எதிர்பார்க்க முடியாது.

2009 தனது குடும்ப உறுப்பினர்களை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் கூட இன்னும் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நீதியைக் கூட கொடுக்காத அரசு இப்படியானவர்களுக்கு நீதி கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

இருந்தாலும் இன்னும் ஒரு கருத்தும் இருக்கிறது. ஊடகங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு தேவையும் இருக்கிறது. தற்போது ஊடகங்களுக்கு அப்பால் சமூக வலைத்தளங்கள் ஊடாக சில பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக சிலர் தற்கொலை செய்யுமளவுக்கு போலி முகநூல் மூலமாக சில பிரச்சாரங்கள் செய்யப்படுவதனால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

இருந்தபோதும் அதை விடுத்து ஊடகங்களை அடக்கி, தனக்கு எதிரான கருத்துக்களை யாருமே கூறக்கூடாது என்றொரு நிலையில் தான் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் வருகிறது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்.

இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிராக 56 அமைப்புகள் குரல் கொடுத்திருக்கின்றார்கள். எனவே, சர்வதேசத்தின் கவனம் இலங்கை அரசு மீது திரும்பி இருக்கின்றது. ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறுகின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அரசு சிந்திக்கிறது. எங்களை பொருத்தமட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் வேண்டாம்; பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம்; ஊடகங்களை அடக்கும் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமும் வேண்டாம் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்றார்.