இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன்

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு.

சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சியை ஏனைய கட்சிகளுடன் இணைந்து முன்னெடுக்கிறது என்றால் அதன் பொருள் அது ஏதோ ஒரு விகிதமளவிற்கு தலைமை தாங்க முற்படுகிறது என்பதுதான். தலைமை தாங்க வேண்டிய மூத்த கட்சியான தமிழரசுக் கட்சியை மேவி டெலோ முன்கை எடுக்கிறது என்றுதான் பொருள். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கூட்டமைப்புக்குள் ஒரு அப்பாவிப் பங்காளியாகக் காணப்பட்ட டெலோ இயக்கம்  இவ்வாறு திடீரென்று முன்கை எடுக்க காரணம் என்ன ?

முதலாவது காரணம், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தமை. இரண்டாவது காரணம்,டெலோ இயக்கத்துக்கு 3 ஆசனங்கள் கிடைத்தமை. மூன்றாவது காரணம், சுமந்திரனின் தொடர்ச்சியான அவமதிப்புக்களால் ஏற்பட்ட கோபமும் ரோஷமும். நான்காவது காரணம் டெலோ இயக்கத்தின்  பேச்சாளரும் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவருமான குருசாமி சுரேந்திரன்.

அப்பாவியாக காணப்பட்ட டெலோ இவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்க முடியும் என்பது சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் அனுப்பப்பட்ட ஒரு கூட்டுக் கடித்தில் நிரூபிக்கப்பட்டது.அதில் தமிழரசுக் கட்சி இணையவில்லை. எனினும் தமிழரசுக் கட்சியை தவிர்த்துவிட்டு ஏனைய கட்சிகள் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்ப முடியும் என்பது கடைசியாக நடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் நிரூபிக்கப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக இவ்வாறு இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையைக் முன்வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு டெலோ இயக்கம் முன்கை எடுப்பதை தமிழரசுக்கட்சி ரசிக்கவில்லை.டெலோவின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டினார்கள். பசில் ராஜபக்ச இருக்கிறார் என்று மற்றொரு பகுதியினர் குற்றம் சாட்டினார்கள்.

குறிப்பாக டெலோவின் முன்னெடுப்புக்களில் சுமந்திரன் இணைக்கப்படவில்லை.ஏனெனில் அது கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் சுமந்திரன் தொடர்ச்சியாக பங்காளிக் கட்சிகளை அவமதித்தமையும் ஒரு காரணம்தான். எனினும் சுமந்திரனை ஒதுக்கியது ஒரு தந்திரோபாயத தவறாக காணப்பட்டது. ஏனெனில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்புக்குள்ளும் அடுத்தகட்டத் தலைவராக சுமந்திரனே காணப்படுகிறார். அவரை மீறி செல்லத்தக்க தகைமை தங்களுக்கு இருப்பதாக கட்சிக்குள் வேறு யாரும் இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை. எனவே கூட்டமைப்பினதும் தமிழரசுக்கட்சியினதும் செயற்படு தலைவராக காணப்படும் சுமந்திரனை ஒதுக்கிவிட்டு அப்படி ஒரு ஒருங்கிணைப்பை முன்னெடுத்தமை தந்திரோபாய ரீதியாக பலவீனமானது. அதன் விளைவுகளே கடந்த பல வாரங்களாக ஏற்பட்டுவரும் குழப்பங்கள் ஆகும்.

இதனால்தான் டெலோ இயக்கம் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவைக்கு கொடுத்த அழைப்புகளை மாவை வெளியில் கூறாமல் மறைத்திருக்கிறார். ஏனெனில் கட்சியின் தலைவராக அவர் காணப்பட்டாலும் சுமந்திரனை பகைத்துக்கொண்டு முடிவெடுக்க முடியாதவராக அவர் காணப்படுகிறார். அதுபோலவே சம்பந்தரை தமது முன் முயற்சிகளுக்கு தலைமை தாங்குமாறு டெலோ இயக்கம் பல தடவை கேட்டும் அவர் அதை மறுத்து விட்டார். சுமந்திரனை ஒதுக்கும் அந்த முயற்சிகளை சம்பந்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதே சமயம் சுமந்திரன் தனது முதன்மையை நிரூபிக்கும் விதத்தில் ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கி அமெரிக்காவுக்கு போனார்.அதோடு கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு இந்தியா அழைத்தபோது சம்பந்தர் அதை ஒத்திவைத்தார். இவை அனைத்தினதும் தொகுக்கப்பட்ட சித்திரமானது சம்பந்தர் இந்தியாவை இனப்பிரச்சினைக்குள் முழு அளவுக்கு சம்பந்தப்படுத்த விரும்பவில்லை என்ற தோற்றத்தை வெளிக்கொண்டு வந்தது. எனவே அவ்வாறு இந்தியாவை முரண் நிலைக்குத் தள்ள விரும்பாத சம்பந்தர் முடிவில் டெலோவின் முன்னெடுப்புக்களுக்கு ஒத்துழைக்க முன்வந்தார். இதன் விளைவாக கடைசியாக நடந்த இரண்டு சந்திப்புகளில் தமிழரசுக் கட்சி பங்குபற்றியிருக்கிறது.

தமிழரசுக்கட்சியின் உள்நுழைவோடு கூட்டுக் கோரிக்கையின் வடிவம் மாற்றப்படும் நிலைமைகள் தெரிகின்றன.கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இரண்டாவது சந்திப்பில் கூட்டுக் கோரிக்கையின் ஆரம்ப வடிவத்திலிருந்து அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அது இயல்பான ஒன்றுதான். ஏனென்றால் எந்த ஒரு கூட்டுக் கோரிக்கையும் தொடக்கத்தில் இருப்பதைப் போல முடிவில் அமைவதில்லை. பல கட்சிகள் சம்பந்தப்படும் ஒரு முன்னெடுப்பில் அப்படித்தான் மாற்றங்கள் ஏற்படும். அது இயல்பானது, இயற்கையானது, தவிர்க்க முடியாதது.

கடந்த ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் அது நடந்தது. அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளின் முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம் பெற்றது. அதில் சுமந்திரனும் சிவாஜிலிங்கமும் ஏற்றுக்கொண்ட அடிப்படைகள் வேறு.  ஆனால்,வவுனியாவில் நடந்த இரண்டாவது சந்திப்பில் கஜேந்திரகுமார் இணைந்தபின் முடிவெடுக்கப்பட்ட கோரிக்கை வேறு. அக்கோரிக்கை பின்னர் கிளிநொச்சியில் நடந்த கடைசிச் சந்திப்பில் வேறு அம்சங்களை இணைத்து இறுதியாக்கப்பட்டது. எனவே பல கட்சிகள் சம்பந்தப்படும்போது கூட்டு கோரிக்கை மாற்றம் காணும்.

அதுதான் இப்பொழுது நடக்கிறது. தமிழரசுக்கட்சி உள்நுழைந்த பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விட இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் கோரிக்கையை முன் வைப்பது என்ற அம்சம் முதன்மை பெறுவதாக தெரிகிறது. எனினும் எல்லா தரப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுதி வரைபு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாதவரையிலும் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் வெளியே நிற்கிறது. அக்கட்சியை உள்ளே கொண்டு வந்திருந்தால் கூட்டுமுயற்சி அதன் முழுமையான வடிவத்தை அடைந்திருக்கும். எனினும் அக்கட்சியை உள்ளே கொண்டு வரும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருங்கிணைப்பு முயற்சிகளின் தொடக்கத்திலிருந்து கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மனோ கணேசன்,ரவூப் ஹக்கீம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அவரை அணுகி நேரடியாக அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் அண்மை வாரங்களாக ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் கருத்துக்கள் மேற்படி ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு எதிரானவைகளாகவும் காணப்படுகின்றன. எனவே அவரை இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இந்த ஒருங்கிணைப்புக்குள் இணைத்திருந்தால் புவிசார் அரசியல் தொடர்பிலும் பூகோள அரசியல் தொடர்பிலும் அக்கட்சியானது துலக்கமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கும். அதோடு இப்பொழுது தயாரிக்கப்பட்டுவரும் இறுதியாவணம் வேறொரு வடிவத்தை அடைந்திருக்கும்.

கிடைக்கும் தகவல்களின்படி அந்த இறுதிவரைபு பெரும்பாலும் வரும் புதன்கிழமை கையெழுத்திடப்படலாம் என்று தெரிகிறது. அந்த இறுதிவரைபு எப்படியும் அமையலாம். ஆனால் அது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஒரு கூட்டு முயற்சியாக அமையும். மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து தமிழ்க் கட்சிகள் இவ்வாறாக ஓர் ஒருங்கிணைப்புக்குப்  போனமை என்பது ஒரு முக்கிய திருப்பம். இது ஒரு விதத்தில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது காணப்பட்ட நிலைமைக்கு நிகரானது.

மிகக் குறிப்பாக கூட்டமைப்புக்குள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக அப்பாவியாக காட்சியளித்த இரு கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் தலைவர்களோடு இணைந்து இவ்வாறான ஒர் ஒருங்கிணைப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியிருப்பது என்பது கூட்டமைப்பின் அக ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் ஒரு முக்கிய அடைவுதான்.அதேசமயம் கட்சிகளுக்கிடையிலான போட்டாபோட்டிகள் மற்றும் முரண்பாடுகளுக்கு ஊடாக ஒரு மக்கள் கூட்டத்தின் வெளியுறவுக் கொள்கையை அணுகக் கூடாது என்பதிலும் சம்பந்தப்பட்ட கட்சிகள் தெளிவாகவும் விழிப்பாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.