இந்தியா – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாகப்பட்டினம் துறைக்கு மாற்றம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையே நடத்தப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் சேவை யாழ்ப்பாணத்திற்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலானதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காகத் துறைமுகத்தைத் தயார்ப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

காரைக்கால் இந்தியாவின் புதுச்சேரி (பாண்டிச்சேரி) மாநிலத்தில் அமைந்திருக்கிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

பயணிகள் கப்பல் சேவை முதலில் காரைக்காலில் அமைக்கத் திட்டமிடப்பட்டபோதும், அந்தத் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படுவதால், அது பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்புடையதாக இருக்காது என்று பின்னர் நிராகரிக்கப்பட்டது. கரித்தூசு அங்கு பெரும் பிரச்சினையாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்தோடு காரைக்காலில் இருந்து சென்னையை அல்லது தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளை அணுகுவதற்கான போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவானவை என்ற காரணத்தாலும் அந்தத் துறைமுகத்தைத் தடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நாகப்பட்டினம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகம் பயணிகளைக் கையாள்வதற்கு ஏற்றது என்பதுடன் அங்கிருந்து சென்னைக்கு நாளாந்தம் இரு நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன என்றும் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளைஅடைவதற்கான போதிய வசதிகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவையை நடத்துவது என்று தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் போக்குவரத்துக்கான டெர்மினல் அமைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்துமாறும் இந்திய மத்திய அரசு தமிழ்நாடு ஆட்சியாளர்களிடம் கோரியது. ஆனால், இந்த ஆண்டுக்கான தமது வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால் இனி அடுத்த ஆண்டே இதற்கான நிதியை ஒதுக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு கைவிரித்துவிட்டது. இதையடுத்து இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் இந்தப் பணிகளுக்கென 9 கோடி ரூபாயை (இந்திய ரூபாய்) ஒதுக்கீடு செய்து, அதனைத் தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. பயணிகள் டெர்னிமல் பகுதி தயாரானதும் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.