திடீர் ஜனாதிபதி ரணிலால் பேச்சு எனும் போலி வேசத்திற்குள் புதிய நாடகம் அரங்கேற்றம்

திடீரென வந்த ஜனாதிபதி ரணில் இப்பொழுது எங்களை அழைத்து பேச்சு என்று ஒரு போலி வேசத்திற்குள் புதிய நாடகம் அரங்கேறிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் படுகொலை நிகழ்வு (10.06.2023) நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறான நினைவு நாட்களை அடுத்த சந்ததி மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் நினைவேந்தல் செய்யப்படுகின்றது. மாறிமாறி வந்த கடந்தகால அரசுகள் ஆரம்ப காலங்களில் யே.ஆர்.ஜெயவர்த்தான முதற்கொண்டு இறுதியாக ரணில் விக்கிரமசிங்க வரைக்கும் ஆட்சிசெய்தவர்கள் கடந்த ஆட்சிகாலங்களில் திட்டமிட்டு இனப்படுகொலையினை அரங்கேற்றி இருந்ததை நாங்கள் மறந்துவிடவில்லை.

இந்த இனப்படுகொலைகள் எல்லாம் எங்களின் தமிழ்தேசியத்தினை சிதைவடையசெய்து உணர்வுகளை அடக்கி உரிமைபோராட்டத்திற்கு எங்கள் தாயார் படுத்தல்களை அடியோடு கிள்ளிவிடுவதற்காக காலத்திற்கு காலம் திட்டமிட்ட இனப்படுகொலைகள் அரங்கேறி வந்துள்ளன.

அரசியல் ரீதியாக எங்கள் உரிமை போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட போது மூத்த தமிழ்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிடப்பட்டு சிங்கள பேரினவாத வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட வரலாற்றினை நாங்கள் கண்டுள்ளோம் அது இன்றுவரை தொடர்கின்றது.

அண்மையில் கடைசியாக சிங்கள பேரினவாதத்தின் கைக்கூலிகளால் படுகொலை முயற்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் இதுபோன்றுதான் தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உரிமை போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது அரசின் ஏவல்படைகள் ஊடக அச்சுறுத்தும் செயற்பாடு இன்றுவரை தொடர்கின்ற நிலையாகத்தான் இருக்கின்றது.

எங்கள் போராட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகவும் எங்கள் உரிமை போராட்டத்தினை நாங்கள் மீண்டும் ஒருதடவை சிந்திக்ககூடாது என்பதற்காகவே மாறி மாறி வரும் அரசு செயற்படுகின்றது.

தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி முனைகின்றார். அவரால் கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கா தன்னை தயார்படுத்துவதற்காக ஒருபோலி நாடகம் இந்த பேச்சுவார்த்தை என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆரம்ப பேச்சு வர்த்தை தமிழ்தேசிய கட்சிகள் என்று அழைக்கப்பட்ட நிலையில் கடைசியாக நடந்த பேச்சுவார்தை தமிழரசு கட்சி என்று ஒரு குறுகிய எல்லைக்குள் கொண்டுவரப்பட்டு பேச்சு நடைபெற்றுள்ளது.

கடந்தகலங்களில் விடுதலை போராட்ட போரளிகளை பிரித்ததைபோல் இப்போது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தினை மீண்டும் ஆயுதமாக காணக்கூடியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.