இந்திய கடற்படை பிரதானி இலங்கைக்கு விஜயம் ; இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னாவின் அழைப்பின் பேரில், இந்திய கடற்படையின் பிரதானி அட்மிரல் ஆர் ஹரி குமார், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக திங்கட்கிழமை (12) கொழும்பை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், பாதுகாப்புச் செயலர், பாதுகாப்புப் படைத் தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

அத்தோடு வியாழக்கிழமை (15) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் பிரதம அதிதியாக கலந்து கொள்வுள்ளார்.

இதே வேளை புதன்கிழமை (14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சஹ்யாத்ரி கப்பல் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

இந்திய கடற்படை பிரதானியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் அடையாளப்படுத்துகிறது.

அத்தோடு இவ்விஜத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதோடு , பொதுவான பாதுகாப்பு அமைதியை உறுதி செய்வதற்கான திறனை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.