பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.