இந்தியாவின் அழுத்தத்தினால் வடக்கு மாகாணத்தில் சீனாவிற்கு அபிவிருத்தி செயற்திட்டங்கள் மறுக்கப்பட்டன. இந்தியாவின் பாதுகாப்பு நிமித்தம் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் இலங்கையின் வெளிவிவகார கொள்கையின் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது, ஆகவே வெளிவிவகார கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எமது நாட்டின் வெளிவிவகார கொள்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் சுயாதீனத்தன்மையை பாதிக்காத வகையில் வெளிவிவகார கொள்கை நடுநிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் இன்றும் உலக நாடுகளில் வாழ்கிறார்கள்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கும்,ஜப்பான் நாட்டுக்கும் வழங்க முயற்சி எடுக்கப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கும் முயற்சி தோல்வியடைந்ததன் பின்னரே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டது, ஆகவே இலங்கையின் வெளிவிவகார கொள்கை நடுநிலையானது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது.
இந்தியாவின் பாதுகாப்பு காரணிகள் நிமித்தம் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் இலங்கையின் வெளிவிவாகர கொள்கையை கேள்விக்குள்ளாக்கியது.
வடக்கு மாகாணத்தில் சீனாவிற்கு ஏதேனும் செயற்திட்டம் வழங்கும் போது அதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கும் போது அந்த செயற்திட்டத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்கிறது. இது முழு வெளிவிவகார கொள்கைக்கும் எதிரானதாக அமையும்.
அதேபோல் சீனாவின் தொழினுட்ப தகவல் கப்பல் இலங்கைக்கு வருகை தரும் போது இந்தியா கடும் அழுத்தத்தை பிரயோகித்தது.
எமது வெளிவிவகார கொள்கை பொருளாதாரத்தில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது. இந்தியாவின் அன்றைய கொள்கைக்கும், இன்றைய கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் பிராந்தியங்களை ஆட்சி செய்தவர்களின் கொள்கைக்கு அமைய இந்தியாவுடனான இலங்கையின் வெளிவிவகார கொள்கை காணப்பட்டது என்றார்.