இந்திய நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிருடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தின் 9வது பதிப்பை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயமும் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் ஒன்றிணைந்து புதன்கிழமை 21ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வொன்றினை ஒழுங்கமைத்திருந்தது.

யோகா தினத்தினை அனுஸ்டிப்பதற்காக 19 இந்திய கடற்படைக் கப்பல்கள் உலகளாவிய ரீதியில் பணிநிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 2023 சர்வதேச யோகா தினத்தினைக் குறிக்கும் தனித்துவமிக்க முயற்சியான பூகோள சமுத்திர வளையத்துடன் கொழும்பையும் இணைக்கும் முகமாக, இந்திய நீர்மூழ்கிக் கப்பலான வாஹிரிலும் அதற்கருகிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னே, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடல் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.எஸ்.டி.சில்வா, இலங்கை கடற்படையினர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள், ஐ.என்.எஸ் வாஹிர் மாலுமிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் ஒன்றிணைந்திருந்தனர்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், இந்தியா – இலங்கை இடையிலான பொதுவான பாரம்பரியமாகக் காணப்படும் யோகாவின் நிலைமாற்று சக்தி தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் உள்ள யோகா நிறுவனங்கள் மற்றும் யோகா ஆர்வலர்களின் வலுவான ஆதரவு மற்றும் உத்வேகத்துடன் கடந்த 50 நாட்களும் இந்திய உயர் ஸ்தானிகராலயமும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் இணைந்து நாடளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான யோகா சார்ந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்ததாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும், 2023 சர்வதேச யோகா தினத்தை அனுஸ்டிப்பதற்காக ஐ என் எஸ் வாஹிர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் விஜயம் மூலமாக நல்லெண்ணம் நட்புறவு மற்றும் தோழமையின் செய்தி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய கடற்படையின் கல்வாரி ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிர் அண்மையில் சேவையில் இணைக்கப்பட்டிருந்ததுடன் முதற்தடவையாக வெளிநாடொன்றின் துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

2023 ஜூன் 19 முதல் 22 வரை இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நின்ற காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள், சாரணர்கள், தேசிய காலாட்படையினர், இலங்கை கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இக்கப்பலுக்குள் விஜயம்செய்து பார்வையிட்டிருந்தனர்.

அதுமாத்திரமல்லாமல் வெளிக்கள நிகழ்வுகளாக கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களைச் சந்தித்திருந்த ஐ என் எஸ் வாஹிர் நீர்மூழ்கியின் மாலுமிகள், சில பாடசாலைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாஹர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய இந்திய கொள்கைகளின் அடிப்படையில் இரு அயல் நாடுகளினதும் கடற்படைகள் இடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒன்றிணைவினை இந்த விஜயம் மேலும் வலுவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.