தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக வெற்றி பெறுவதாக இருந்தால் அதில் காணப்படுகின்ற தடைகளை முதலில் இனங்கண்டு களைய வேண்டுமென கலாநிதி தயான் ஜயத்திலக வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த தடைகளை களைந்து பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக யதார்த்தமாக முன்னெடுக்கப்படக்கூடிய ஐந்தம்ச யோசனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
அந்த யோசனைகளில் முதலாவதாக, 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிய விவாதம் முடிவுறுத்தப்பட வேண்டும் என்பதோடு, அதற்கமைவாக இறுதி நிலை ஒப்பந்தமானது உச்சநீதிமன்றத்தின் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் (15 ஆண்டுகள் வரை) முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே, இனங்களுக்கு இடையிலான துருவமுனைப்படுத்தலின்றி முழுமையாக நடைமுறைச்சாத்தியமாக்க முடியும்.
இரண்டாவதாக, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்தியாவினையும் உள்ளீர்த்ததானதொரு கிரமமான அணுகுமுறை அவசியமாகின்றது.
மூன்றாவதாக, மாகாண சபைகள் தற்போதுள்ள நிலைமைகளை விடவும் மேலும் வினைத்திறனாக செயற்படுவதற்கு அனைத்து தரப்பினரும் இணங்குவதோடு அதுபற்றிய விவாதத்தங்கள் நீடித்துச் செல்லாது பூச்சியமாக்கப்பட வேண்டும்.
நான்காவதாக, பொறுபுக்கூறல் குறித்து டெஸ்மண்ட் டி சில்வாவின் அறிக்கையை செயற்படுத்த முடியும். அதேநேரம், போர்க்கால பொறுப்புக்கூறல் தொடர்பிலான விடயங்களை படையினருக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்க கூடாது.
ஐந்தாவதாக, பிரஜைகளுக்கு இடையிலான பாகுபாடுகளை எதிர்க்கும் அதேநேரம், சமத்துவமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்தோடு, இனப்பாகுபாடு, இனவாதம், மற்றும் சகிப்புத்தன்மை குறைவடைதல் ஆகியவற்றை எதிர்த்துப்போராடுவதற்காக டேர்பன் பிரகடனம் மற்றும் ஐ.நாவின் வழி வரைபடத்தினை பின்பற்ற வேண்டும்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்மொழியப்பட்ட செயற்றிட்டத்தினை நடைமுடைப்படுத்துவதோடு உண்மையான சமத்துவத்தினை அறிவார்ந்த சமூகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சிங்கள பேரினவாதத்தின் மீளமுடியாத வெற்றியின் அவதாரம் என்று கருதிய கோட்டாபய ராஜபக்ஷ, அரகலவியின் எழுச்சியால் பதவி கவிழ்க்கப்பட்டு வெளியேற்றப்பட்ட படிப்பினை நம்முன்னே உள்ளது. ஆகவே, இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலை தொடர்ச்சியாக வளர்த்துச் செல்லாது அரசியல்தலைவர்கள் இதயசுத்தியுடன் செயற்படுவார்கன் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.