முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எங்களது எச்சரிக்கைகளைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாடு இந்நிலைமைக்கு வந்திருக்காது எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2020ஆம் ஆண்டு முதல் நாம் கூறியவற்றை இந்த அரசாங்கம் கேட்கவில்லை. அரசாங்கம் பயணிக்கும் பாதை சரியில்லை. இந்த முறையில் பயணித்தால் நாடு வீழும், பணவீக்கம் ஏற்படும், பொருள்களின் விலைகள் அதிகரிக்கும், வட்டி வீதங்கள் அதிகரிக்குமென எச்சரித்தோம். ஆனால், நாம் கூறிய எதனையும் கேட்கவில்லை. நாம் இவ்வாறு கூறும்போத சிரித்தார்கள். அரசாங்கம் திமிர் பிடித்திருந்ததால் சுயவிமர்சனத்தைக்கூட செய்யவில்லை. இறுதியில் நாம் எச்சரித்த அனைத்தும் நடந்தது.
நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாம் கூறியதை கேட்காத மொட்டுக் கட்சி அரசாங்கம், தமது கடந்தக் கால பயணம் தவறு புதியப் பாதையில் பயணிக்க வேண்டும். புதியப் பாதை சிரமமானதாக இருக்கும் என இப்போது கூறுகிறது. இவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. லீகுவான் வந்தாலும் இந்நாட்டைக் கட்டி யெழுப்ப முடியாது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் ஒன்றிணைய வேண்டுமென கேட்கிறார்கள் – என்றார்.