இலக்கத்தகடுகளிலுள்ள மாகாணங்களை நீக்க தீர்மானம்

புதிதாக வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் உரிமையாளர்கள் மாற்றத்தின் போது வாகன இலக்க தகடுகளிலும் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும், உரிமையாளர்கள் மாற்றப்படும் போதும் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க வாகன இலக்கத்தகடுகளிலுள்ள மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் ஒவ்வொரு முறையும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது வாடிக்கையாளர்களும் போக்குவரத்து திணைக்களமும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள நேரிட்டுள்ளது.

வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் போக்குவரத்து திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் போது, சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு 24 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த புள்ளி வழங்கும் முறைமை தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.