இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை? மாற்று வழியை நாடும் சீன நிறுவனத்தின் அதிரடி

இலங்கைக்கு பசளைகளை ஏற்றுமதி செய்யும் சர்ச்சைக்குரிய சீன நிறுவனம், இலங்கைக்கு எதிரான தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு எதிராக கடுமையான பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதிக்க முன்மொழிந்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பசளைகளில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் பரிசோதனைகள் மூலம் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இலங்கை அதனை நிராகரித்திருந்தது.

எனினும், நாணயக்கடிதம் திறக்கப்பட்ட நிலையில் தமது பொருட்களுக்கான பணப் பெறுமதியை வழங்கவேண்டும் என்று சீன நிறுவனம் வலியுறுத்தி வந்தது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கம், 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை Seawin Biotech Group Co,Ltd க்கு வழங்குவதற்கு தீர்மானித்தது.

இருப்பினும் நீண்ட தாமதத்துக்கு பின்னர் சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தும் இலங்கையின் முடிவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பிலேயே சீவின் பயோடெக் நிறுவனம், இலங்கை மீது தனது எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்வதாக கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, சீவின் பயோடெக் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சீன அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஷான்டாங் மாகாண அரசாங்கத்தை அணுகியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நிறுவனங்களிடம் முறையிடப்போவதாகவும் சீவின் பயோடெக் அதிகாரி ஒருவரை கோடிட்டு கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமது பசளையை இறக்குமதி செய்வதற்காக, சீவின் பயோடெக் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு சில இலங்கை உள்ளூர் அதிகாரிகள், தரகுப்பணம் கோரியதாகவும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.