சிறையில் உள்ளோர் அனைவரும் குற்றவாளிகள் அல்ல – அமெரிக்காவில் நீதி மறுக்கப்பட்ட தமிழர்!

அமெரிக்காவில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு தண்டனைக்கு உள்ளான இலங்கை தமிழரான ராஜ் ராஜரட்ணம், தமது கைது மற்றும் தண்டனை தொடா்பாக நூல் ஒன்றை இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்காவில் வெளியிட்டாா்.

Uneven Justice ( சீரற்ற நீதி) என்ற இந்த ஆங்கில நுால் தொடர்பில் கனடாவின் International United Women federation ( சர்வதேச ஐக்கிய பெண்கள் சம்மேளனத்தின்) ராஜி பாற்றர்சன் தமிழில் நுால் விமா்சனம் செய்துள்ளாா்.

Uneven Justice – தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? ஆமாம், அமெரிக்காவில் ஒரு தமிழன் நீதிக்காக போராடிய கதை புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. தன் மீது குற்றம் சுமத்திய அரசாங்கத்தை எதிர்த்து தான் ஒரு நிரபராதி என நிரூபிக்க கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடி, பதினோரு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று, ஏழரை வருடங்கள் தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் , இரண்டு வருட மௌனத்தை கலைத்திருக்கின்றது இந்த நூல். தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு எவ்வாறு பின்னப்பட்டது, எவ்வாறு நடத்தப்பட்டது, சாட்சியங்கள் எப்படி தனக்கெதிராக உருவாக்கப்பட்டது போன்ற விடயங்களுடன் தான் பெற்ற அனுபவத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர்.

சரி ஏன் இந்த புத்தகத்தை அவர் எழுதினார் என்கின்ற வினாவுக்கு, அனைவரும் குறிப்பாக அவரது சகாக்கள், பொருளாதார அல்லது நிதி துறையின் வல்லுநர்கள் இந்த புத்தகத்தை வாசித்து, நடந்த உண்மைகளை அறிந்து கொண்டு தன்னை நியாயம் தீர்க்க வேண்டும் என்பதுடன், சட்ட விரோதமாக தனது உரையாடல்கள் ஓட்டுக் கேட்கப்பட்டு, அந்த நாட்டின் பிரஜையான தான் கண்காணிக்கபட்டதன் ஊடாக தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

2008 -ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு அல்லது பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு பலிகடாவை தேடிய லட்சிய வழக்குரைஞர்களால் ஒரு பொறிக்குள் தன்னை சிக்க வைத்து, பொது ஊடகங்களினால் அநியாயமான முறையில் தனது கவுரவம் மற்றும் கண்ணியமான வாழ்வு சிதறடிக்கப்பட்டு, மன அழுத்தத்தை எதிர் நோக்கியதையும் அனைவரும் அறிய வேண்டும்.

இரண்டாவதாக, மேலும் முக்கியமாக, சில சீர்கேடான வழக்குரைஞர்கள் மற்றும் FBI முகவர்கள் குற்றவியல் நடத்தையிலிருந்து எப்படி தப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்குள் உருவாக்குவதன் மூலம் ஒரு பொது விவாதத்தைத் தொடங்க விரும்புவதாக குறிப்பிட்ட எழுத்தாளர் அமெரிக்காவின் நீதி அமைப்பில் சமநிலைகள் இல்லை என்பதை மிக ஆணித்தரமாக கூறுகின்றார் .

சரி யார் இந்த எழுத்தாளர்? அமெரிக்காவின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கு மிக சிறந்த நிதி மேலாளராக திகழ்ந்த ராஜ் ராஜரட்ணம் என அறியபடும் ராஜகுமாரன் ராஜரட்ணம் தான் இந்த எழுத்தாளர்.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் பதினோரு வயதில் தாய் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார்.

லண்டனில் அமைந்துள்ள Dulwich college- ல் தனது கல்வியை தொடர்ந்த அவர் பட்டப்படிப்பை பொறியியல் துறையில், University of Sussex- ல் நிறைவு செய்தார்.

1983-ல் தனது முதுகலைமானி பட்டப்படிப்பை அமெரிக்காவில் பென்சில்வேனியா Wharten school of the University யில் வணிக நிர்வாகத்தில் நிறைவு செய்து அங்கேயே ஒரு வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்தார்.

1985-ல் நீதம் & கோ(Needham & CO) நிறுவனத்தில் இணைந்து அவரது கடின உழைப்பாலும் அசாதாரண திறமையாலும் படிப்படியாக உயர்ந்து தனது 34-வது வயதில் அதன் தலைவராக உயர்ந்தார்.

1992-ல் நீதம் & கோ கம்பெனியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட Hegde Fund திரு ராஜ் ராஜரத்தினம் அவர்களால் வாங்கப்பட்டு Galleon Group என பெயரிடப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

ஒரு குறுகிய காலத்தில் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்த அவரது நிறுவனம் உலகின் முதல் பத்து Hedge Fund நிறுவனங்களுக்குள் தனது பெயரையும் உள்வாங்கி கொண்டது.

மிக சிறந்த பகுப்பாய்வாளர்களை இணைத்து, அமெரிக்காவின் சட்ட திட்டங்களை மிக சரியான முறையில் பின்பற்றி மிகப் பெரியளவில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த Galleon Group மற்றவர்களின் கண்களை உறுத்தியதில் ஆச்சரியம் இல்லை தானே?

Wall Street Super Star என அழைக்கப் பட்ட திரு ராஜ் ராஜரட்ணம் அவர்களை 2009-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் “forbes” Magazines அமெரிக்காவின் 400 பணக்காரர்களில் ஒருவராகவும், உலகின் 559 வது பணக்காரராகவும் மதிப்பிட்டது.

அதே ஆண்டு அக்டோபர் 16-ம் திகதி Federal Bureau of Investication (FBI) லினால் சட்ட விரோதமான உள் வர்த்தக ( insider trading) நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் பட்டு கைது செய்யப்பட்டார்.

அவருக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்றுக்கொண்டு குறைந்த அளவு தண்டனை பெறுதல், அரசாங்கத்தின் சாட்சியாக மாறி தண்டனையில் இருந்து தப்புதல், நிரபராதி என நிரூபிக்க போராடுதல். செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டு தண்டனை அனுபவிக்க திரு ராஜ் அவர்களுக்கு உடன்பாடில்லை.

நேர்மையான வழியில் தனது வாழ்வை அமைத்துக் கொண்ட அவருக்கு, அரசாங்கத்தின் கையாளாக மாறி இன்னுமொருவரை வஞ்சக வலைக்குள் சிக்க வைத்து விட்டு அவர் தப்பிக்கவும் மனமில்லை.

எனவே அவருக்கு முன்னால் இருந்த தெரிவு தன்னை நிரபராதி என நிரூபிக்க போராடுவது தான். ஆனால் அந்த பயணத்தில் பல மில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ள அதேவேளை, மிக சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதுவும் அவருக்கு தெரிந்திருந்தது.

அமெரிக்காவின் நீதித்துறையில் மிக நம்பிக்கை கொண்ட அவர் நீதிக்காக போராட துணிந்தார் .

அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாரானார். அந்த நீதிக்கான பாதையில் அவர் கண்டறிந்த விடயங்கள் பற்றியும், அவர் சந்தித்த பல விதமான மனிதர்கள் பற்றியும் அமெரிக்க நீதி துறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது போன்ற பல விடயங்களை மிக தெளிவாக கூறியிருக்கின்றார்.

எந்த மிரட்டல்களுக்கும் அடி பணியாத அவர், அவரது சட்டத்தரணிகளுடன் இணைந்து தனக்கெதிராக புனையப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து பல ஆதாரங்களை வழங்கிய போதும் அவற்றில் பல புறக்கணிக்கபட்டதையும் தமது பக்க சாட்சியங்களில் ஐந்து பேரை மட்டுமே உள்வாங்கி கொண்டதாக குறிப்பிட்ட அவர் நடுவர்கள் பன்னிரண்டு பேரில் (Jury) ஒருவருக்கும் அவரது துறை சார்ந்த அறிவு பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நிதி மேலாண்மை மற்றும் முதலீடு தொடர்பான அறிவு இல்லாதவர்களினால் எவ்வாறு அதன் சட்ட முறைகள் நுணுக்கங்கள் பற்றி தெரியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த நடுவர் குழுவினரினால் குற்றவாளி என தீர்க்கப்பட்டு பதினோரு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன் 150 மில்லியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டதாக குறிப்பிடும் எழுத்தாளர் இந்த முழு நூலையும் சிறையில் தனது கையாலேயே எழுதியாக குறிப்பிடுகின்றார்

அமேசான் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும் என்பதில் ஐயமில்லை .

இந்நூல் விற்பனையில் பெறப்படும் நிதியானது நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு உதவ பயன்படும் என திரு ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையினால் வஞ்சிக்கப்பட்டு, செய்யாத குற்றத்துக்காக ஏழரை வருடங்கள் சிறையில் வாடிய வலிகள் அவரது வார்த்தைகளில் பிரதி பலிக்கின்றது.

இந்த நூல் அவரது வலி நிறைந்த குரல் மட்டுமல்ல நீதி மறுக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் அனைவரின் குரலாகும்.

சிறையில் இருப்போர் அனைவரும் குற்றவாளிகளுமல்ல .வெளியில் உலாவுவோர் அனைவரும் நீதிமான்களுமல்ல.

 

ராஜி பாற்றர்சன்

Raji Patterson Canada International United Women federation