இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது.
குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பிரதிபலன்னை கருதாமல் பல உதவிகளை செய்துவருகின்றது.
சீனாவும் பல விடயங்களை இங்கே செய்கின்றது, கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தினை அமைத்தார்கள் ஆனால் அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ளனர். ஆனால் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசாரமண்டபத்தின் நிர்வாகத்தை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. இருப்பினும் அதனை யாழ்பாண மாநாகரசபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.
அத்துடன் வறுமை, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து இலங்கை மக்கள் விடுபடவேண்டும். அதற்குரிய மேம்பாடான திட்டங்களை வகுத்து நல்லவிதமாக செயற்படுவதற்கான பிரார்த்தனைகளை நாம் செய்கிறோம்.
இதேவேளை இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம், தமிழ்மக்களாக இருக்கலாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.
அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும். அமைதியான வளமான இலங்கை உருவாக வேண்டும்’ என கூறினார்.