இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் அரசியல் தீர்வு விடயமாக இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளன. பிரேமதாஸவின் காலத்தில்கூட 1989, 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளும். சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றியிருந்தார்கள். அந்த நேரத்தில் இறுதியில் பிரேமதாஸவால் கூறப்பட்டது தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒருமித்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தால் அதனைப் பரிசீலிக்கின்றேன் என தெரிவித்திருந்தார். தற்போது அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களும் அதே கருத்தாக சமஸ்ட்டி தீர்வைத் தருவதற்கு முன்னர் தமிழ் மக்கள் ஒன்றாக வேண்டும் என கூறியிருக்கின்றார்.
என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்படும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றது. இதனைப் பார்வையிட வந்திருந்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரிடம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
தமிழ் மக்களுக்குத் தீர்வைக் கொடுப்பதற்கு சிங்களக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்படல் வேண்டும், என்பதை நான் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களுக்குக் கூறிக் கொள்கின்றேன். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இனப்பிரச்சனைதான் முக்கியமான காரணமாகும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வைக் கொடுக்க வேண்டும் என சிங்கள மக்கள் மனம்மாறிக் கொள்ள வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டுப்பிரஜைகள், அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் எனவும் சிங்கள மக்கள் நினைக்க வேண்டும்.
புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருடத்தினுள் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்படும் என புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அதபோன்று நீதி அமைச்சரும் புதிய அரசியலமைப்பினூடாக அரசியல் தீர்வைக் கொடுப்போம் எனக் கூறியிருக்கின்றார். கடந்த நாடாளுமன்றத்திலே 21வது திருத்த சட்டம் நிறைவேறியிருக்கின்றது. அதற்குக்கூட சில இனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஆளும், எதிர்க்கட்சி, மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட 179 வாக்குகளை அளித்து அதனை நிறைவேற்றியிரக்கின்றார்கள். அதபோன்று இனப்பிரச்சனைக்குரிய தீர்வு கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஏனெனில் அரசாங்கம் இனைப்பிரச்சனைக்குத் தீர்வு வழங்கினால்தான் சர்வதேசம் தமக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் உதவிகளைச் செய்யும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் வந்துள்ளது. இதற்காக வேண்டி புலம்பெயர் மக்களும் அந்த அந்த நாடுகளிலுள்ள அரசாங்கங்களுக்கு அளுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்கள்.
பிரித்தானியாவினால் ஐ.நா வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கும் எமது புலம்பெயர் தேசத்து தமிழர்களின் வேண்டுகோளின் பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு ஒரு இக்கட்டான நிலமையைக் கொண்டு வருகின்றது. இதிலிருந்து இலங்கை விடுபட வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைக் காணவேண்டியுள்ளது. அதனை இந்த அரசு உணர்ந்திருக்கின்றது. எதிர்காலத்தில் சுபீட்சமான நாடாக இலங்கை திகழ வேண்டுமானால் இனப்பிரச்சனைக்குரிய தீர்வை அரசு முன் வைக்க வேண்டும். அது நிறைவேறினால் இந்நாட்டில் அனைத்து மக்களும் சந்தோசமாக வாழ்வார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.