நாட்டில் விரும்பிய மாற்றத்தை அடைவதற்கான சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை இனி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நாடாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாகவும் விளங்குகிறது. எனவே இலங்கை அந்த நாட்டிடம் இருந்து ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
76 ஆண்டு கால அழிவுகரமான அரசியல் கலாசாரத்தை நாம் நிறுத்த வேண்டும். மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த எதிர்பார்ப்புக்கு தலைமைத்துவத்தை வழங்கி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும். அதற்கு சர்வதேச ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு சில துறைகளில் மூலதனமும் தொழில்நுட்பமும் தேவை. சந்தையை விரிவுபடுத்த சில நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருப்பதன் மூலம் நமது இலக்குகளை அடைய முடியாது. எனவே, உறவுகளை வலுப்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.