இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் யோசனைக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதென வடமாகாண கடற்தொழிலாளர் சங்கங்களிற்கும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிற்குமிடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தமது முடிவை இலங்கை, இந்திய, தமிழக அரசுகளிற்கு எழுத்து மூலம் அறிவிப்பதுடன், மக்கள் போராட்டமொன்றை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் யோசனை இந்திய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு இலங்கை அரசாங்கமும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் இந்த யோசனை தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த யோசனைக்கு தாம் எதிரானவர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர் சந்திப்பொன்றில் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடமாகாணத்திலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளிற்கும், வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.
இன்றைய சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விடயம் தொடர்பில், கடற்தொழிலாளர் சங்கங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்ட எதிர்ப்பு கடிதத்தை இலங்கை, இந்திய அரசுகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பதென இன்று தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள இந்திய தூதரகம், யாழிலுள்ள துணைத்தூதரகங்களில் கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளன.
அத்துடன், தேவைப்படின் இலங்கை அரச தலைவர்களை சந்தித்து பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டமொன்றை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இழுவைமடி தொழில் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையெடுக்குமாறும் அந்த கடிதத்தில் கோரவுள்ளனர்.