இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) கொழும்பில் நடைபெறவுள்ளது.
அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) முற்பகல் நாட்டை வந்தடைந்தது.
தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அவுரமோன் சுப்தாவிதும் தலைமையிலான இந்தக் குழுவில் 26 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.
பண்ட வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, மூல விதிகள், சுங்க ஒத்துழைப்பு, வர்த்தக வசதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
2021 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கான ஏற்றுமதி 59 மில்லியன் டொலர்களாகவும், தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 355 மில்லியன் டொலர்களாகவும் இருந்தன.
தாய்லாந்துக்கு சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதோடு, தாய்லாந்துக்கான பிரவேசம் மூலம் நமது ஏற்றுமதிகளை தாய்லாந்து சந்தைக்கு மட்டுமின்றி மற்ற ஆசியான் சந்தைகளுக்கும் எமது ஏற்றுமதிகளுக்கான பிரவேசத்தை மேம்படுத்துவது மற்றும் தற்போதுள்ள வர்த்தகத்திற்கான வரி அல்லாத வர்த்தகத் தடைகளை குறைப்பது என்பன இப் பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகும்.
தாய்லாந்து சந்தையில் இலங்கையின் இரத்தினக்கற்கள், தேயிலை (கறுப்பு) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை செயல்படுத்துவதற்கும் வழிகள் திறக்கப்படும்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு, இலங்கை சார்பாக பங்கேற்பதோடு, வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு விவகாரங்கள் திணைக்களம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.