உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது என விமர்சிக்கப்படுகின்றது.

மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்களையும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு, பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உத்தேச வரைபின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் இந்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் பகுதியின் பிரிவு 3இ-இற்கு அமைய, எந்தவொரு அத்தியாவசிய சேவை அல்லது விநியோகம் அல்லது ஏதேனும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதி அல்லது அது தொடர்பான போக்குவரத்து வசதிகளை சீர்குலைப்பது பயங்கரவாத குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, குறித்த தரப்பினரது சொத்துகளை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதக் குற்றத்தை செய்வதில் ஈடுபடுத்துதல், தூண்டுதல் அல்லது ஊக்குவிக்கும் நோக்கில் கருத்து வெளியிடுதலும் குற்றம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகம், இணையம், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் ஏனைய பொது விளம்பரங்களும் இந்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தகைய குற்றத்திற்காக, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கை தொடர்பிலும் குறித்த சட்டமூலத்தின் சரத்துக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உத்தேச சட்டமூலத்திற்கமைய, பிடியாணை இன்றி ஒருவரை கைது செய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதுடன், பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, மூன்று மாத காலம் வரை தடுப்புக் காவலில் வைக்கவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.