உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்து பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட கும்பலானது, மொத்த பயங்கரவாத வலையமைப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன் மிக சூட்சுமமாக, குறித்த பயங்கரவாத வலையமைப்பு 2 ஆம் நிலை குழுவொன்றினை தயார் படுத்தி, சிறுவர்களுக்கு தமது சிந்தனைகளை விதைத்துள்ளமையும் அவ்விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரையிலான விசாரணைகளில் 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 311 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் அல்லது தடுப்புக் காவலின் கீழ் உள்ளனர்.

பல வங்கிக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. 365 மில்லியன் ரூபா பணம், அசையும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு, 168 மில்லியன் சொத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இதுவரை 11 குற்றப் பத்திரிகைகள் 46 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 இற்கும் அதிகமான சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு ஆவணங்கள் சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டுள்ளன.

சுமார் 52 ஆயிரம் பக்கங்களை கொண்ட 104 ஆவணங்கள் இவ்வாறு சட்ட மா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளன.

எனவே இது ஒரு பரந்துபட்ட விசாரணை என்பது தெளிவாகின்றது. இவ்விசாரணைகள் தொடர்பில் எனக்கு எந்த அழுத்தங்களும் எவராலும் பிரயோகிக்கப்படவில்லை.

இந்த குண்டுத் தாக்குதல்களில் இறந்த, காயமடைந்தவர்களுக்கு நிலை நாட்டப்படும் நியாயமாக, உறுதியான விசாரணைகள் ஊடாக குற்றவாளிகளை தண்டிப்பதையே நாம் கருதுகின்றோம். எனவே தான் மிக ஆழமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.’ என தெரிவித்தார்.