நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்களை முன்னெடுக்கவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து தேர்தலை நடத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒன்றிணைவதன் ஊடாக நாட்டிற்கு ஏற்பட கூடிய நெருக்கடிகளையும் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களுடன் சனிக்கிழமை (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
இதன் போது அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தேர்தல் நடவடிக்கைகளுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தொடர்புப்பட போவதில்லை. ஆனால் நாட்டிற்கான திட்டங்களின் போது பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து தரப்புகளுடனும் ஒன்றிணைந்து செயல்பட நான் எப்போதும் தயாராகவே உள்ளேன்.
நாட்டின் பொருளாதார நிலைமைகளை சீர் செய்யவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நான் ஏற்கனவே கூறியது போன்று குறைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்ல அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
தேர்தல்கள் ஆணைக்குழு நிதி கோருகின்றது. மறுப்புறம் அரச அச்சக தினைக்களத்தின் தலைவர் வாக்கு சீட்டு அச்சிட நிதி கோருகின்றார்.
உரிய நிதியை வழங்கா விடின் வாக்கு சீட்டுகளை அச்சிடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நெருக்கடியான நிலைமை என இதன் போது கருத்து தெரிவித்த ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஐதே.க வின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறுகையில், யாசகர்கள் வீதிகளில் பணம் கேட்பார்கள். இருப்பவர்கள் கொடுப்பார்கள்.
இல்லாதவர்கள் கடந்து செல்வார்கள் என்றார். எவ்வாறாயினும் தேர்தலுக்கு நிதி வழங்க திறைச்சேரியில் நிதி இல்லை. ஜனாதிபதி ஏற்கனவே கூறியது போன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் 8000 ஆயிரம் என்ற எண்ணிக்கையை வீதத்தால் குறைத்து தேர்தலுக்கு செல்ல எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக தெரிவித்தார்.
அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது ஒக்டோபர் மாதம் அளவில் எவ்விதமான பிரச்சினையும் இன்றி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தியிருக்க முடியும் என ஐ.தே.கவின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன இதன் போது குறிப்பிட்டார்.
தேர்தலை விட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை சீர்குழைக்கும் நோக்கமே எதிர்கட்சிகளுக்கு இருந்தது. இதனால் அந்த கட்சிகளில் பெரும் பிளவுகள் கூட ஏற்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் கூறினார்.
இந்த கருத்துக்களை செவிமெடுத்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்களை முன்னெடுக்கவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து தேர்தலை நடத்த ஒன்றிணைவார்களாயின் தான் அதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.