உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்பு இல்லாது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த முடியாது : ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் நடத்த முடியாது. அத்துடன் தாக்குதலுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தாமல் அதனை புலிகளின் மீது சுமத்தி பாதுகாப்பு துறை வேடிக்கை பார்த்துள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஆறாவதுநாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏப்ரல் தாக்குதல் சாதாரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்க முடியாது. அதற்கு உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்புகள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இதனை நடத்தமுடியாது.

அதேபோன்று ஏப்ரல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த சம்பவங்கள் அனைத்தையும் விடுதலை புலிகளின் மீது சுமத்தி பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வடக்கில் இடம்பெற்ற மோட்டார் கைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பானது ஏப்ரல் தாக்குதலுக்கான பரீட்சாத்த நடவடிக்கையாகவும் இருந்திருக்கலாம். இந்த சம்வவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்தன.

மேலும் ஏப்ரல் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் உட்பட குண்டுதாரிகளில் அதிகமானவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சம்பளம் பெற்றுக்கொண்டவர்கள் என்பது தற்போது வெளிப்படையாகி இருக்கின்றது. அதனால் அப்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த தாக்குதலை பயன்படுத்தி இருக்கலாம்.

அத்துடன் ஏப்ரல் தாக்குதலின்போது 8 குண்டுகளே வெடிக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க கர்த்தினால் மெல்கம் ரஞசித் குரல் கொடுத்து வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் ஆயிரக்கணக்கான குண்டுகள் வெடிக்கப்பட்டன. தேவாலயங்கள் தாக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் கர்த்தினால் மெல்கம் ரஞ்ஜிசி குரல் கொடுக்கவேண்டும்.

மேலும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 2009 இல் முடிவடையும்வரை இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் ஆட்சியில் இருந்து அரசாங்கங்களால் பாராட்டப்பட்டு வந்தனர். ஆனால் 2009 க்கு பின்னர் ஆட்சியில் இருந்து அரசாங்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தன. அந்த நடவடிக்கை இன்றுவரைக்கும் இடம்பெறுகின்றது.

முஸ்லிம்களின் மத கலாசாரத்தின் மீது கைவைத்தார்கள். அவர்களின் பொருளாதாரத்தின் மீது கைவைத்தார்கள். பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார்கள். கொராேனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் உரிமையையும் பறித்தார்கள்.

எனவே நாட்டில் இடம்பெற்ற 83 கலவரம் ஒரு சிறிய இனவாத குழுவாலே ஆரம்பிக்கப்பட்டதாகும் அதனை தடுக்க தவறியதாலே அது யுத்தம் வரைக்கு சென்றது. அதனால் அவ்வாறான இனவாத குழுக்களின் நடவடிக்கைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதா அல்லது நாட்டில் மீண்டும் இனவாத பிரச்சினை ஒன்றை ஏற்படுத்துவதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் என்றார்.