நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தவில்லை என குறிப்பிடுவது பாராளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற அவதானம் செலுத்தவில்லை, ஆளும் தரப்பினரும் எதிர்தரப்பினரும் முன்கூட்டிய நடவடிக்கை தொடர்பில் பேசவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியுள்ளன. இந்த செய்தியின் பிரதியை நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது.நாட்டின் பொருளாதார முகாமைத்துவம், அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்க்கட்சிகள் தான் முதலில் பாராளுமன்றத்திற்கு எடுத்துரைத்தது.
2020.08.21 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான விவாதத்தின் போது பொருளாதார பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்தோம்.
ஆகவே ஜனாதிபதியின் கருத்துக்கள் பாராளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் காலப்பகுதியில் குறிப்பிட்டேன்.ஆகவே பொருளாதார பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.