எனது அரசியல் வாழ்வின் சோக நிகழ்வு – மைத்திரிபால சிறிசேன

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் சோகமான நிகழ்வாக உள்ளது என்று  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று (17) காலை இடம்பெற்ற நிகழ்சியின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் என்பது சிக்கலான விடயம், அது பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர்,  மாவட்ட நீதிமன்றங்கள் உட்பட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சுமார் 20 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, கத்தோலிக்க சமூகத்தின் மீது, தான், மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருப்பதாகவும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உர விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியை நிறுத்த தீர்மானித்த போது, ​​அதன் எதிர்கால விளைவுகள் குறித்து ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் இப்போது ஆதரவற்றவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.