நிருபமா ராஜபக்ஷவின் சொத்துவிபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் கோரிக்கை!

பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களைத் தாக்கல் செய்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கே இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் உள்ளடங்கலான சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்விடயத்தில் பணத்தூயதாக்கல் இடம்பெற்றிருக்கக்கூடுமா என்பது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நிதிக்குற்றவிசாரணைப்பிரிவிற்கும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.