கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி? – மனோ

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு  உள்ள தடையை அகற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம்.

இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளசை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளசிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன்” என்றார்.