முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்களான ரெலோ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரமான கமலநாதன் விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், திருச்செல்வம் இரவீந்திரன், தவராசா அமலன், சமூக செயற்பாட்டாளர்களான ஞானதாஸ் யூட் பிரசாந், பாஸ்கரன் வனஜன் ஆகியோரிடமே வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குறித்த பணிக்குழு உறுப்பினர்கள் ஆறு பேரையும் இன்று பொலிஸ் நிலையம் வருமாறு பொலிஸார் வீடுகளுக்கு சென்று நேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறித்த ஆறு பேரும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில், கடந்த நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
குறிப்பாக, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்காக முதல் நாள் 26ஆம் திகதி மாங்குளம், முல்லைத்தீவு வீதியில் மாவீரர் துயிலும் இல்ல வாசலில் அமைக்கப்பட்ட வளைவில், தமிழீழ வரைபடம், துப்பாக்கி, மாவீரர்கள் சிலரது புகைப்படங்கள் காணப்பட்டமை தொடர்பிலேயே குறித்த வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பணிக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நாம் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியபோது இதே வளைவே இருந்தது. அது தொடர்பில் எந்த விடயமும் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
ஆகவே, அதே வளைவையே நாம் இம்முறையும் அமைத்தோம்.
குறிப்பாக, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்காக 26ஆம் திகதி மாங்குளம், முல்லைத்தீவு வீதியில் துயிலும் இல்ல வாசலில் அமைக்கப்பட்ட வளைவில் தமிழீழ வரைபடம், துப்பாக்கி, மாவீரர்கள் சிலரது புகைப்படங்கள் முதலான சின்னங்களை காலை 8.30 மணிக்கு முன்னரே நாங்கள் அகற்றுவதற்கு இணக்கம் தெரிவித்து, இரவே அந்த சின்னங்களை தீந்தை பூசி மறைத்திருந்தோம்.
எனினும், அதனை மாற்றம் செய்து மறைக்கும் முன்னர் பொலிஸார், அந்த சின்னங்களை அகற்றி, அவற்றை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். அதுதான் நடந்தது என கூறினர்.
குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ள நிலையிலேயே குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதாகவும், மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.