கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் – மன்னிப்புச் சபை

நாட்டின் அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், நாட்டில் வீழ்ச்சியடைந்த வருமானம், வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம் என்பன, பெண்களின் கொள்வனவு திறனைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வழி ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட, அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக, சுகாதாரம் மற்றும் போஷாக்கு என்பன பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறித்த சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.