காணாமல்போனோர் அலுவலகத்தின் உண்மையை தேடிக்கண்டறியும் பணி தொடரும் – மகேஷ் கட்டுலந்த

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தின் விளைவாக தமது அலுவலகத்தின் பணிகள் ஒருபோதும் மழுங்கடிக்கப்படமாட்டாது என்றும், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை தேடிக் கண்டறியும் தமது பணி தொடரும் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிதல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், இழப்பீட்டை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் ஓரங்கமாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை முன்னிறுத்திய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் செயலிழக்கும் என்றும், இவையனைத்தும் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைகள் மாத்திரமே என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், இதுகுறித்து கருத்து வெளியிட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தை தொடர்ந்து தமது அலுவலகத்தின் செயற்பாடுகள் வலுவிழக்கும் என தான் கருதவில்லை எனவும், ஏனெனில், இவ்விரண்டு கட்டமைப்புக்களினதும் பணிகள் வெவ்வேறானவை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தின் பின்னரும், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறியும் தமது அலுவலகத்தின் பணிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அவசியம் என்று தெரிவித்த மகேஷ் கட்டுலந்த, அக்கட்டமைப்பின் உருவாக்கத்தைத் தாம் வரவேற்பதாக குறிப்பிட்டார்.