நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அறிவுறுத்தல்.
நகர அபிவிருத்தி அதிகார சபையானது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அதிக சந்தை பெறுமதியுடன் கூடிய சுமார் 1,008 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்களை வைத்துள்ளது.
அதிக சந்தைப் பெறுமதியுடன் கூடிய, இதுவரையில் அதிகபட்ச பாவனைக்கு உட்படுத்தப்படாத இவ்வாறான காணிகள் தேசியத் திட்டத்தின்படி அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுறவில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
இப்போதும் நாடளாவிய ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சில காணிகள் பல்வேறு நபர்களினால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், காணி வங்கியொன்றை அமைத்து, காணிகளை உரிய முறையில் பட்டியலிடுவதன் மூலம், காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, அந்த காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் கீழ் காணி அபிவிருத்தியுடன் முதலீட்டு மாதிரிக்கு சில நெகிழ்வுத்தன்மையை வழங்குதல், நெகிழ்வான கொடுப்பனவுகளின் கீழ் முதலீட்டாளருக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்குதல் போன்ற பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.