சந்திரிகா வெளியிட்ட மங்கள சமரவீரவின் இரகசிய கடிதத்தால் பரபரப்பு

சிறிலங்காவின் தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்சவுக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எழுதிய இரகசிய கடிதமொன்றை 15 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்டு சிறிலங்காவின் முன்னாள் அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ அரசதலைவராக நியமிக்கப்பட்ட போது, மங்கள சமரவீர தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையே சந்திரிகா குமாரதுங்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அண்மையில் மரணித்த சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த 2006 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் திகதியிட்டு, தனது கைப்பட மஹிந்த ராஜபக்சவுக்கு எழுதியிருந்ததாக கூறப்படும் கடிதத்தை சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

மங்கள சமரவீர, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்த போது அந்தப் பதவில் இருந்து அவரை நீக்குவதற்காக நடத்தப்பட்ட, கட்சி நிறைவேற்றுச் சபை மற்றும் மத்திய குழுக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவிக்கும் வகையில் குறித்த கடிதத்தை அவர் அனுப்பியதாக சந்திரிகா குமாரதுங்க தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கௌரவமான முறையில் விலகுவதாக மங்கள அறிவித்திருந்தாலும், அவரின் பிறந்தநாள் அன்று அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஸ விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனுர பண்டாநாயக்க, மங்கள சமரவீர மற்றும் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஆகியோருக்கே அதனை எதிர்க்கும் திறன் அப்போது இருந்தது எனவும், தனது மனச்சாட்சியின் பிரகாரம் உடன்படாத போதிலும் மஹிந்தவின் தலைமையை எதிர்க்க மாட்டேன் என்று பல சந்தர்ப்பங்களில் வாய் மொழியாகவும் எழுத்து மூலமாகவும் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடயத்தின் இரகசிய தன்மையை பேணும் வகையில் தனது சொந்தக் கையெழுத்தில் மங்கள சமரவீர குறித்த கடிதத்தை எழுதினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த கடிதத்தை எழுதி, சரியாக பத்து மாதங்கள் கழித்த பின்னர் எந்தக் காரணமும் இன்றி மங்கள சமரவீர அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மங்கள சமரவீர தனது கொள்கையைக் கைவிடவில்லை என சந்திரிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மங்கள சமரவீரவினுடையது எனக் கூறப்படும் இந்தக் கடிதம் தற்போது தென்னிலங்கை அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.