மதுபானசாலைகள் திறப்பு குறித்து கருத்து வெளியிட முடியாது – சுகாதார அமைச்சின் பேச்சாளர்

மக்கள் மத்தியில் சிறிலங்கா அரசாங்கம் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கின்ற மதுபானசாலைகள் திறக்கப்பட்ட விடயம் குறித்து, எந்தவொரு கருத்தையும் ஊடகங்களுக்கு வெளியிட முடியாது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை பற்றி சரமாரியான கேள்விகளை ஊடகவியலாளர்கள் முன்வைத்தபோது அவற்றிற்கு பதில் அளிப்பதை தவிர்த்த ஹேமந்த ஹேரத், குறித்த விடயம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி தம்மை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே அது குறித்து தற்போது கருத்து வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது.

எனவே இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பத்திலிருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இது குறித்த கேள்விகளை தொடர்ந்தும் கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம்

. காரணம் என்னால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துவதாகக் காணப்பட்டால் நான் தனித்து தான் அதற்கு முகங்கொடுக்க வேண்டும். எனவே என்னால் இதுபற்றி எதனையும் கூற முடியாது” என்றார்.