சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுவதன் அவசியம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான சர்வதேச நாடுகளின் தூதுவர்களிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அது இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.

அந்தவகையில் பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் நடவடிக்கைக்குழு மற்றும் சுவிஸ்லாந்து தமிழர் நடவடிக்கைக்குழு ஆகிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரஇறுதியில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிரான தடைவிதிப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதற்கான சாத்தியப்பாடு, அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வை வழங்குதல் மற்றும் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது வலியறுத்தப்பட்டது.