சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா?

நிலாந்தன்

சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும்.

ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பிச் செல்லும் வழி, அல்லது அரசாங்கம் தனது தோல்விக்கு எதிர்க் கட்சிகளையும் கூட்டுப் பங்காளிகள் ஆக்கும் அல்லது கூட்டுப் பொறுப்பாக்கும் ஒரு தந்திரம், அல்லது காலத்தை கடத்தும் ஓர் உத்தி. அதாவது எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பி காலத்தை கடத்தும் ஓர் உத்தி எனலாம்.

குறிப்பாக,இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து கடந்த பல தசாப்தங்களாக வட்டமேசை மாநாட்டில் இருந்து தொடங்கி இன்று வரையிலான எல்லா சர்வகட்சி மாநாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் அவை அனைத்தும் தந்திரமான உள்நோக்கம் கொண்டவை என்பது தெரியவரும். இலங்கை அரசாங்கம் நியமித்த விசாரணைக் கொமிஷன்கள் போலவே சர்வகட்சி மாநாடுகளும் தீர்க்க விரும்பாத ஒரு பிரச்சினைக்காக கூட்டப்படும் மாநாடுகள்தான்.

தமிழ் அரசியலில் முதலில் வட்டமேசை மாநாடு என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஜி. ஜி. பொன்னம்பலம் என்று கூறப்படுகிறது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் எல்லா கட்சிகளும் ஒரு வட்ட மேசையில் அமர்ந்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்பொழுது அவருடைய அரசியல் எதிரிகளாக காணப்பட்ட தமிழரசுக் கட்சி அப்படி என்றால் சதுரமேசை மாநாட்டைக் கூட்டலாம் என்று அவரை கிண்டல் செய்தார்கள். ஆனால் வட்டமேசை மாநாடுகள், அல்லது சதுர மேசை மாநாடுகள், நல்லது சர்வகட்சி மாநாடுகள் போன்றன தமிழ் மக்களைப் பொறுத்தவரை தோல்வியுற்ற அரசியல் நடைமுறைகள்தான்.

இவ்வாறான தோல்விகரமானதொரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்தே கடந்த புதன்கிழமை நடந்த சர்வகட்சி மாநாட்டையும் பார்க்க வேண்டும்.நேற்று முன்தினம் நடந்த கூட்டமைப்புடனான சந்திப்பும் அத்தகையதா?

நாட்டை இப்பொழுது ஆள்வது மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை வென்றெடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் ஆகும். நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும்விதத்தில் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் ஓர் அரசனுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை ஜனாதிபதி பெற்றுக் கொண்டார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நிறைவேற்று அதிகாரமும் அவரை வெற்றி பெற்ற ஒரு நிர்வாகியாக நிரூபிக்க தவறி விட்டன. யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் சிங்கள மக்கள் இப்பொழுது “கோட்டா வீட்டுக்குப் போ” என்று கேட்கும் ஒரு நிலைமை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டை கூட்டி இருக்கிறது. சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஜனாதிபதியைப் பொறுத்தவரை கீழிறங்கி வருவதுதான். ஆனால் அவர் இதய சுத்தியோடு இறங்கி வருகிறாரா என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். அல்லது அவர் தனது தோல்வியை எல்லா கட்சிகளுக்கும் உரியதாக மாற்றப் பார்க்கிறாரா என்றும் கேட்கலாம்.

தமிழ் கட்சிகளில் தமிழரசுக்கட்சியும் பிள்ளையானின் கட்சியும் ஈபிடிபியும் புளட்டும் மட்டும் அதில் பங்குபற்றின. ஏனைய கட்சிகள் பங்குபற்றவில்லை. தென்னிலங்கை மையக் கட்சிகளில் மிகச்சில கட்சிகள்தான் பங்குபற்றின.

அந்த மாநாடு ரணிலின் மதிப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்றோரை ரணில் புத்திசாலித்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ரணில் தனது ஆளுமையை காட்டியிருக்கிறார்.

ரணில் ஒரே நேரத்தில் இரண்டு தரப்புக்கு தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஒன்று அரசாங்கத்துக்கு. மற்றது சாஜித்துக்கு.அப்படித்தான் சஜித்தும் அவரும் தனது பலத்தை ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவும் காட்ட வேண்டி இருக்கிறது, அதேசமயம் ரணிலுக்கு எதிராகவும் காட்ட வேண்டியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் இல்லை. சில மாதங்களுக்கு முன் மனோ கணேசன் கூறியது போல அரசாங்கம் எப்பொழுதோ தோற்று விட்டது. ஆனால் அந்த தோல்வியை தங்களுடையதாக சுவீகரித்துக் கொள்ளத் தேவையான ஐக்கியம் எதிர்க் கட்சிகள் மத்தியில் கிடையாது.

சர்வகட்சி மாநாடு ரணிலின் ஆளுமையை நிரூபித்திருக்கலாம். ஆனால் அதற்காக அவரை அங்கீகரிக்க அரசாங்கம் தயாரா? அல்லது சஜித்தும் எதிர்க்கட்சிகளும் தயாரா? என்று பார்க்க வேண்டும்.

மூத்த அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு கூறுவதுபோல மேற்கத்திய நாடுகளில் இவ்வாறான நெருக்கடிகள் வரும் பொழுது, எல்லாக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும். அப்போதுதான் நாட்டின் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டி நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். ஆனால் இலங்கை தீவில் அவ்வாறான செழிப்பான ஒரு பாரம்பரியம் இல்லை. ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கினால் இப்போதிருக்கும் நெருக்கடிகளை தற்காலிகமாக சமாளிக்கலாம்.ஆனால் அவ்வாறு ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சிங்கள கட்சிகள் தயாரா ? ஏனெனில் அது எந்த தேசிய அரசாங்கம் என்பதே இங்குள்ள அடிப்படைக் கேள்வியாகும்.அது சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசாங்கமா ? அல்லது இலங்கைத் தீவின் பல்லி த்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் ஓரூ தேசிய அரசாங்கமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

தன்னைத் தனிச் சிங்கள வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவராக பிரகடனப்படுத்தும் ஒரு ஜனாதிபதி அவ்வாறு பல்லினத்தன்மைமிக்க ஒரு தேசிய அரசாங்கத்தை எப்படி உருவாக்குவார்? அவ்வாறு மூன்று இனங்களில் தேசிய இருப்பையும் நிராகரித்த காரணத்தால்தான் அவர் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையே இல்லை என்று கூறுகிறார்.அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக கூறுகிறார் இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் covid-19 தான் என்று.

ஆனால்,இனப்பிரச்சினைதான் பொருளாதார பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். நாட்டின் முதலீட்டுக் கவர்ச்சியை அது அழித்துவிட்டது. 2009 க்குப் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அதனால் நாடு அதன் முதலீட்டு கவர்ச்சியை கட்டியெழுப்ப முடியவில்லை. இவ்வாறு இனப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே நொந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த அதிர்ச்சியை பெருந்தொற்று நோய் கொடுத்தது. அதாவது இனப்போர் காரணமாக ஏற்கனவே சரிந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டு வெடிப்பும் covid-19உம் கோட்டாபய அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகமும் மேலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின என்பதே சரி.

எனவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது என்பது அதன் மூலப் பிரச்சினையில் இருந்தே தொடங்க வேண்டும்.உடனடிக்கு வேண்டுமென்றால் சரிந்து விழும் வாழைக்கு முட்டுக் கொடுப்பது போல எதையாவது செய்யலாம். அதைத்தான் இப்போது செய்ய எத்தனிக்கிறார்கள். ஆனால் நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

அண்மையில் உலகின் மிகவும் சந்தோஷமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் பின்லாந்து மீண்டும் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. படைத்துறை ரீதியாக வளம் குறைந்த பின்லாந்து ரஷ்யப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் வாழ்கிறது.கடந்த நூற்றாண்டிலிருந்து பேரரசுகளுக்கிடையிலான போட்டிக்குள் அது எப்பொழுதும் கெட்டித்தனம்டினமாகவும் கவனமாகவும் முடிவுகளை எடுத்தது வருகிறது. உக்ரைனைப் போலவோ அல்லது ஜோர்ஜியாவைப் போலவோ பேரரசுகளின் இழு விசைகளுக்குள் பக்கம் சாயாமல் நிதானமாக முடிவுகளை எடுத்தது. தமது நாடு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறக் கூடாது என்று சிந்தித்து பின்லாந்து மக்கள் பொருத்தமான முடிவுகளை எடுத்தார்கள்.

உலகின் மிகச்சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாக பின்லாந்து கணிக்கப்படுகிறது. அதை அந்நாடு தனது வெளியுறவுக் கொள்கையில் அழகாக, தீர்க்கதரிசனமாக பிரதிபலிக்கிறது. இலங்கையும் இலவசக் கல்விக்கு பெயர் பெற்றது.ஆனால் இலங்கைத்தீவின் இலவச கல்வியானது இனப்பிரச்சினையைத் தீர்க்க தவறிவிட்டது. இலங்கைத்தீவின் இலவசக் கல்வியானது ஒருபுறம் வறிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை வழங்கியது. அதேசமயம் அது இனப்படுகொலையை தீர்க்க தவறியிருக்கிறது. இப்போதிருக்கும் அரசாங்கம் வியத்மக எனப்படும் தொழில்சார் திறன் மிக்க நிபுணர்களைக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாத்தால் வழி நடத்தப்படுவது என்று கருதப்படுகிறது. இப்போதிருக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் அந்த சிந்தனைக் குழாத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் இந்த புத்திசாலிகள் எல்லாம் நாட்டை எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்?