சிங்கப்பூர் இத்தாலி நாடுகள் இலங்கைப் பயணிகளுக்கு பயணத் தடைகளை விதித்தன

கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்கு பயண வரலாற்றைக் கொண்ட நீண்ட கால பாஸ் அனுமதி வைத்திருப்போர் மற்றும் குறுகிய கால வருகை யாளர்கள் நாட்டுக்குள் நுழைவது தடை செய்யப்படும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தடை இன்று(1) முதல் நடைமுறைக்கு வருவதுடன் மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வருவோருக்கும் இந்த நிபந்தனை அமுல்படுத் தப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைய முன் அனுமதி பெற்ற அனைவருக்கும் இத்தடை பொருந்தும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சமீபத்திய பயண வரலாற்றைக் கொண்ட கப்பல் பணியாளர்களின் மாற்றல்களுக்கும் தடை செய்வதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளதால் இலங்கையர்கள் இத்தாலிக்குள் நுழைவதை அந்நாடு தடை செய்துள்ளது.

மேலும் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் தங்கள் பிரஜைகள் இலங்கைக்கு பயணிப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.