நம் நாட்டின் தழிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நிலையிலிருந்து சற்று எழும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக பாரிய நிதி ஒதிக்கீட்டிற்கு உட்பட்ட துறையாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டு வருகின்றது.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் தமது நாட்டின் பாதுகாப்பு துறைக்கு வரவு செலவுத் திட்டத்திலிருந்து 12 மற்றும் 13 வீதங்களுக்கு இடைப்பட்ட தொகையையே ஒதுக்கப்படுகின்றன.
இந்நாடுகளை போன்றே அந்நிய அச்சுறுத்தல் இல்லாத நமது நாடும் சமமான தொகையை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது.
நமது நாட்டிற்கு அந்நிய நாடுகளினால் அச்சுறுத்தல் இல்லை. நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் சமத்துவத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பது நாட்டின் ஆட்சியாளர்களே என குறிப்பிட்டுள்ளார்.