சிறுமிக்கு நீதி கிடைக்க ரிஷாத் எம்.பி. முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ; ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் மரணித்துள்ள சிறுமிக்கு நீதி கிடைக்க ரிஷாத் பதியுதீன் எம்.பி. முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

ரிஷாத் பதியுதீன் எம்.பி.யின் வீட்டில் மலையக சிறுமி ஒருவர் மரணித்திருக்கின்றார்.

பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர், ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ரீதியில் ரிஷாத் பதியுதீன் எம்.பி. அந்த சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் மன்னாரில் இருந்து இமானுவேல் எமாஞ்சலின் என்ற யுவதி விமானியாக முதல்கட்ட பயிற்சியை முடித்துள்ளார். அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.